வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
மூவாயிரம் பாடல் என்ற போற்றுதலுக்குரியது, திருமந்திர நூல். இந்த நூலை இயற்றிய திருமூலர், அன்பே சிவம்; சிவமே அன்பு என்பதை எடுத்துரைக்கிறார். அதோடு மந்திரம், தியானம், இறைவனை அடையும் வழி போன்றவை பற்றியும் பேருரை ஆற்றுகிறார். பெருஞ்சிறப்புக்குரிய இந்நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
ஊமைக் கிணற்றகத்து உள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத் தாண்டே.
பொருள்:- இறைவனின் மீது பக்தி செலுத்தி புலன்கள் அடக்கி இருப்பவர்கள், ஊமைக் கிணறு போன்றவர்கள். இறைவனோடு ஒன்றிய நிலையில் சலனமின்றி இருப்போரிடத்தில்தான் ஐந்து ஆழமான விஷயங்கள் உண்டாகும். அவற்றை அனுபவிக்கும் ஆன்மா, உண்மை நெறியில் பிறழாது இந்த உலகத்தில், ஐந்து உறுப்புடைய ஆமை அடங்கி இருப்பதைப் போல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும்.