வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திரம் நூல், மூவாயிரம் பாடல்களால் ஆனது. இதனை ஆண்டிற்கு ஒரு பாடல் என்று, மூவாயிரம் ஆண்டுகளாக திருமூலர் எழுதியதாக சொல்லப்படுகிறது. இந்த நூல் சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவனாமே.
விளக்கம்:- உலக வாழ்வில் ஈடுபட்டு வாழ்வான் ஒருவன். வீடுபேறு இன்பம் நாடி வாழ்வான் ஒருவன். அந்த இருவருமாகிய அவனும், அவனும், சிவனாகிய அந்தப் பெருமானை அறியமாட்டார்கள். அப்படி சிவபெருமானைப் பற்றி அந்த இருவரும் அறிவார்களாயின், அவர்கள் இருவரும் அந்தச் சிவபெருமானின் அருளால், சிவனாகவே ஆவர்.