திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேர்த்திருவிழா
கொங்கு நாட்டு சிவ தலங்களில் மலை மீது அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், சாமி ஆண் பாதி, பெண் பாதியாகவும் அர்த்தநாரீஸ்வராக வீற்றிருக்கும் கோவில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று திருவிழா தொடங்கியது.
14 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் தொடக்கமாக மலை மீது உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்று விழா நேற்று மதியம் நடந்தது. முன்னதாக செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவபெருமாள் சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரர் உற்சவர் திருமேனிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து, கொடிமரத்தின் முன்பு அருள்பாலித்தார்.
ரிஷப கொடி
இதையடுத்து மங்கள வாத்தியம் மற்றும் சிவபக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தங்க கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியில் நந்தியம் பெருமான், சூலாயுதம், உடுக்கை, சூரியர், சந்திரர் உள்ளிட்ட சாமி உருவங்கள் வரையப்பட்டு, மாவிலை தோரணம் மற்றும் மலர் மாலைகள் சுற்றப்பட்டு இருந்தது. கொடியேற்று விழாவிற்கு பின்னர் கொடிமரத்தில் அருள்பாலிக்கும் தங்க அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம், மங்கல வஸ்திரம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க கொடிமரத்தை சுற்றி பச்சை தர்ப்பைப்புல் மற்றும் மாவிலைகள் சுற்றப்பட்டது.
விழாவில் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, கொ.ம.தே.க. பொறுப்பாளர் தங்கமுத்து, தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு உள்பட திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடி சேலையை எழுகரை நாட்டு செங்குந்த முதலியார் சமூகத்தினர் உபயமாக வழங்கினர். 4 ரத வீதி வழியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கொடி சேலை கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.