திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்


திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்
x

சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டு உடுத்தி, சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை (வியாழக்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

10-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது.

சனிக்கிழமை 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story