கோடை கால விடுமுறை: ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
கோடை கால விடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ராமேஸ்வரம்:
தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் கோவிலுக்கு கடந்த 10 நாட்களாக மேலாகவே பக்தர்களின் கூட்டம் வருகை அதிகமாகவே உள்ளது. அதுபோல் கோடைகால விடுமுறை முடிவடைய இன்னும் ஒரு வாரம் காலமே உள்ள நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடவும் கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரதவீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தீர்த்த கிணறுகளில் நீராடினர்.
தொடர்ந்து கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்களும் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சாலை பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.