தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி தேரில் அம்மன் தேரோட்டம் நடைபெறும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள், அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள், வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வாக, நேற்று உலகம்மன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விழாவில் அம்மன் தேரோட்டம் மட்டும் நடைபெறுவது வழக்கம். ஆனால் அம்மன் தேருக்கு திருப்பணி நடைபெறுவதால் தேரோட்டம் நடைபெறாது என்று முதலில் கோவில் நிர்வாகம் அறிவித்தது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி தேரில் அம்மன் தேரோட்டம் நடைபெறும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுவாமி தேரில் உலகம்மன் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி காலை 10 மணிக்கு நிலைக்கு வந்தது.