பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நிகழ்ச்சி
தஞ்சை கோடியம்மன் கோவில் உற்சவத்தையொட்டி பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்;
தஞ்சை கோடியம்மன் கோவில் உற்சவத்தையொட்டி பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோடியம்மன் கோவில்
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவில் சோழ மன்னன் விஜயாலயனால் கட்டப்பட்டு சோழர், நாயக்கர், மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டது ஆகும்.இந்த கோவிலின் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி ஆகியோருக்கான திருவிழா கடந்த மாதம் 13, 21, 28 ஆகிய தேதிகளில் காப்புக்கட்டுதல் நடைபெற்றது. நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கோடியம்மன் கோவிலிலுள்ள 2 காளி உருவங்களையும் அதனைத் தூக்குபவர்களையும், திருநீறு நிரப்பிய 2 தனித்தனி கபாலத்துடன் புறப்பட்டு, மேலராஜவீதிக்கு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு
நேற்று அதிகாலை 2 மணிக்கு மேலராஜவீதியுள்ள சங்கரநாராயணன் கோவிலிருந்து பச்சைகாளியும், கொங்கணேஸ்வரர் கோவிலிருந்து பவளக்காளிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு 2 காளியம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் முடிந்து உறவாடுதலும், 6-ந்தேதி விடையாற்றியும், 7-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 9-ம் தேதி காப்பு அவிழ்த்தலும், 11-ம் தேதி இரவு இருப்பிடத்தில் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், மேலவீதி காளியாட்ட உற்சவ கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.