திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
x

‘ஆரூரா.. தியாகேசா’... பக்தி கோஷம் விண்ணை பிளக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்

திருவாரூர்;

'ஆரூரா.. தியாகேசா'... பக்தி கோஷம் விண்ணை பிளக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பங்குனி உத்திர திருவிழா

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழும் இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை திருவாரூர் ஆழித்தேர் பெற்று உள்ளது.திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இந்திர விமானம், பூதவாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி காளை வாகனங்களில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர், அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

ஆழித்தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேேராட்டம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு தியாகராஜர் அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக கீழவீதியில் நின்ற தேருக்கு எழுந்தருளினார். இதேபோல் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் அவர்களுக்குரிய தேர்களில் எழுந்தருளினர்.நேற்று அதிகாலை 5 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 7.37 மணிக்கு ஆழித்தேரோட்டம் தொடங்கியது. ஆழித்தேரோட்டத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

பக்தி கோஷங்கள்

ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பிடித்து ஆழித்தேரை இழுத்தனர். அப்போது பக்தர்கள் ஆரூரா... தியாகேசா... என பக்தி கோஷங்கள் எழுப்பியது விண்ணை பிளந்தது.வடங்களை பிடித்து இழுக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பச்சைக்கொடி காட்டியபோது ஆழித்தேரை வடங்கள் பிடித்து பக்தர்கள் பக்த கோஷங்களுடன் இழுத்தனர். சிவப்பு கொடி காட்டியபோது வடங்களை இழுப்பதை நிறுத்தினர்.

பொக்லின் எந்திரங்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கீழவீதியில் புறப்பட்ட ஆழித்தேர் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று மீண்டும் கீழவீதியில் நிலைக்கு வந்தது. நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் ஆடி, அசைந்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஆழித்தேரை நான்கு வீதிகள் சந்திப்பில் திருப்புவதற்கு பொக்லின் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆழித்தேருக்கு பின்பு அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டது.

விழாக்கோலம் பூண்ட திருவாரூர்

ஆழித்தேரோட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், துணை தலைவர் அகிலா சந்திரசேகர், நகரசபை உறுப்பினர்கள் வாரை.பிரகாஷ், செந்தில், தொழிலதிபர்கள் எஸ்.வி.டி.ஜெ.கனகராஜன், பாரத் பிரபாகரன், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி சூரியநாராயணன், அபி சுப்பிரமணியன், ஸ்ரீவிஜயா மோட்டார் நிர்வாக இயக்குனர் வரதராஜன், ஸ்ரீ வினாயகர் ஸ்டீல் பர்னிச்சர் உரிமையாளர் ரவிச்சந்திரன், கணேஷ் எலக்ட்ரானிக்ஸ் இளங்கோ, வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆழித்தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் திருவாரூர் நகரம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி விழாக்கோலம் பூண்டது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஆழித் தேரோட்டத்தை நடத்த தமிழக போலீசார் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


Next Story