தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்
நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெறும் தேரோட்டத்துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர் சுத்தப்படுத்தப்பட்டு மணிகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது.
தஞ்சாவூர்;
நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெறும் தேரோட்டத்துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர் சுத்தப்படுத்தப்பட்டு மணிகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா, சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது.
தேர் அலங்கரிக்கும் பணிகள்
தேர் தஞ்சை மேலவீதியில் உள்ள தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து புறப்படுகிறது. தேரை 1-ந்தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். இந்த தேரின் சாதாரண உயரம் 19 அடி ஆகும். அகலம் 18 அடியாகும். தேரின் சாதாரண எடை 40 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்டவுடன் 50 டன் எடை இருக்கும்.இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேரின் முன்பகுதியில் குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
மணிகளுக்கு வர்ணம் பூசும் பணி
தேர் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தேரில் உள்ள மணிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. நாளைக்குள்(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பணிகளும் முடிந்து தேரோட்டத்துக்கு தேர் தயாராகி விடும்.தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். பக்தர்களின் தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் உடைத்து வழிபட ஏதுவாகவும் 14 இடங்களில் தேரை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.தேரோட்டம் நடைபெறுவதற்காக சாலை சீர் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.