திருப்பதி: சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் தேரோட்டம்
பிரம்மோற்சவ விழாவில் இன்று சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதி:
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.