ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதால், நாம் வணங்கும் பெரியவர்களின் ஆற்றல் நமக்குள் சேரும். பெரியவர்களை வணங்குவதன் பொருள் இதுவே.
கேள்வி:- பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதில், அர்த்தம் உண்டா? (கே.சுலோச்சனா, சென்னை)
பதில்:- உண்டு. மனித உடல் ஒரு காந்தம் போன்றது. தலைப் பகுதி வடதுருவம் என்றால், கால் பகுதி தென் துருவம். நாம் பெரியவர்களை வணங்கும்போது, நம் தலை அவருடைய கால்களில் படுகிறது. அதாவது அவருடைய பாதமாகிய தென் துருவத்தின் மீது, நம்முடைய தலையாகிய வட துருவம் படுகிறது. அவ்வாறு படும்போது, அந்தப் பெரியவர்களின் காந்த சக்தி நம் தலை வழியே நம் உடலில் பாய்கிறது. மின் அழுத்தம் அதிகமுள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்தை நோக்கி மின்சாரம் பாயும். அதுபோல, நாம் வணங்கும் பெரியவர்களின் ஆற்றல் நமக்குள் சேரும். பெரியவர்களை வணங்குவதன் பொருள் இதுவே.
கேள்வி:- எவ்வளவோ பழங்கள் இருக்க, தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது ஏன்? (மு.கஜேந்திரன், விழுப்புரம்)
பதில்:- வாழைப்பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது என்பது ஒரு காரணம். அது மட்டுமல்ல! வாழையில் மட்டும்தான் நார், இலை, சருகு, வாழைப்பூ, வாழைக்கச்சல், காய், பழம், வாழைத்தண்டு, விஷ நீக்கியான வாழைப்பட்டை, வாழைக்கிழங்கு என அனைத்தும் பயன்படுகின்றன. அனைத்து விதங்களிலும் இவ்வாறு பயன்படுவது, ஆண்டவனுக்குப் படைக்கப்படுவது முறைதான்.
கேள்வி:- நெற்றி மற்றும் உடல் முழுவதும் திருநீறு பூசினாலும், கழுத்தில் பூசிக்கொள்ளக் கூடாது என்று சிலர் சொல்கிறாரகள். இது உண்மையா? (எஸ்.ஏகாம்பரம், வேலூர்)
பதில்:- உண்மையல்ல. விபூதி மகாத்மியம் எனும் நூல், விபூதியைப் பற்றிய பற்பல தகவல்களைத் தருகின்றது. அதில் நம் உடம்பில் விபூதி அணிய வேண்டிய இடங்களாக 38 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் 33, 34-வது இடங்களாக வலப் பக்கக் கழுத்தும், இடப்பக்கக் கழுத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த இடங்களுக்கான தேவதைகளையும் அந்நூல் குறிப்பிடுகிறது. அடுத்தது வடமொழி ஸ்காந்த புராணத்தில் 'உத்தமாங்கே லலாடேச களே வக்ஷஸி நாபிகே' என விபூதி அணிய வேண்டிய இடங்களைக் குறிக்கும் போது, தலை, நெற்றி, கழுத்து, மார்பு, வயிறு ஆகிய இடங்களைச் சொல்கிறது. இங்கும் கழுத்து இடம் பெற்றுள்ளது. பரத்வாஜ முனிவர் விபூதி அணிய வேண்டிய இடங்களைப் பட்டியல் இடுகிறார்; லலாடே ஹ்ருதயே களே - நெற்றி, இதயப்பகுதி, கழுத்து ஆகிய இடங்களைக் குறிக்கும், அதிலும் `கழுத்து' இடம் பெற்றுள்ளது. விருத்தாசல புராணத்தில் விபூதி மகிமையைச் சொல்லும் பகுதியில் உச்சியில், நெற்றி, கண்டம் (கழுத்து) என அங்கும் அருந்தமிழில் கழுத்து இடம் பெற்றுள்ளது. ஆகவே கழுத்தில் விபூதி அணியலாம்; அணிய வேண்டும்.
கேள்வி:- ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்து சென்றான் என்பதை ஏற்க முடியுமா? (க.அன்பழகி, தர்மபுரி)
பதில்:- ஏற்க முடியும்; ஏற்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட வைமானிக (விமான) சாஸ்திரம் எனும் நூல் விளக்கம் சொல்கிறது. அதில் விமானங்களின் வகைகள், அவற்றில் பொருத்தப்பட வேண்டிய கருவிகள், பயன்படுத்தப்பட வேண்டிய லென்சுகள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. விமானத்தை எந்த உலோகத்தால் உருவாக்க வேண்டும்; விமானம் ஏற-இறங்கத் தேவையான கருவிகள்; பகைவரின் விமானத்தை வீழ்த்தத் தேவையான இயந்திர அமைப்புகள்-என்பவையெல்லாம் உள்ளன. சீவக சிந்தாமணி எனும் பழந்தமிழ்க் காப்பியத்தில், ஆகாயத்தில் பறந்துசெல்லக் கூடிய விமானம் ஒன்றை, ஏழு நாட்களில் உருவாக்கியதாகத் தகவல்கள் உள்ளன. ஆகவே, ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்து சென்றான் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கேள்வி:- மனிதர்களுக்கு சரி! தெய்வங்களுக்குள் உறவு முறைகள் சொல்லப்படுகின்றனவே; இது சரியா? (அ.மகேஷ், தென்காசி)
பதில்:- சிவபெருமான் - கடவுள்; அவர் மனைவி-பார்வதி; அவர்களின் பிள்ளைகள் - விநாயகர், முருகன்; அந்த விநாயகருக்கும் முருகனுக்கும் தாய் மாமன் - மகாவிஷ்ணு; அந்த மகாவிஷ்ணுவின் மனைவி - மகாலட்சுமி! இவை அனைத்தும் நம் கோவில்களில் நாம் தரிசிக்கும் தெய்வங்கள். இவ்வாறு தெய்வங்களுக்குள் உறவு முறைகளைச் சொல்லி, கோவில்களில் நிறுத்தி, நம்மைக் கோவிலுக்கு வரச்செய்து, நம் குடும்பங்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்தும் ஒரே கலாசாரம் நம்முடையது மட்டுமே! ஆகவே தெய்வங்களுக்குள் உறவு முறை சொல்வது சரிதான்.