ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்


ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
x

சுவாமிக்கு சாற்றப்பட்ட மலர்கள், மலர் மாலைகள் ஆகியவற்றை அதிகாலைப் பூஜையின்போது களைவார்கள். அதைத் தரிசிப்பதே நிர்மால்ய தரிசனம்!

கேள்வி:- தெய்வ குற்றம் ஆகி விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். தெய்வ குற்றம் என்பது எப்படிப்பட்டது? (ஜெ.ஜோதி, கன்னியாகுமரி)

பதில்:- குல தெய்வத்திற்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பது; தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை செய்யாமல் இருப்பது; தெய்வங்களாக மதிக்க வேண்டிய மகான்களை மதிக்காமல் அவமானப்படுத்துவது; தெய்வத் திருவிழாக்களுக்கோ, வழிபாட்டிற்கோ இடையூறு செய்து தடுப்பது போன்றவை தெய்வக் குற்றம் என்று சொல்லப்படும்.

கேள்வி:- தெய்வத்திற்கான பிரார்த்தனைகளில் ஒன்றாக மண் சோறு சாப்பிடுவதும் இருக்கிறது. இந்தக் கடுமையான வழிபாடு அவசியமா? (வண்ணை கணேசன், சென்னை)

பதில்:- வழிபாட்டு முறைகள், பிரார்த்தனைகள் பற்றிய ஞான நூல்களில் சொல்லப்படாத வழிபாட்டு முறை இது. ஒரு சிலர், தனிப்பட்ட முறையில் தாங்கள் பிரார்த்தனை செய்தபடி, அந்த பிரார்த்தனையை இவ்வாறு நிறைவேற்றுகிறார்கள். அது திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக, மக்களிடையே, "சரி! இதுவும் செய்ய வேண்டிய ஒன்று போல் இருக்கிறது" என்று பரவி விட்டது. மண் சோறு சாப்பிடும் வழக்கம் தனிப்பட்டது; வழிபாட்டு முறைகளைச் சொல்லும் ஞான நூல்களில் சொல்லப்படாதது.

கேள்வி:- நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன? (எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்)

பதில்:- நிர்மால்யம் என்ற சொல்லுக்கு, `முன்னரே அர்ப்பணிக்கப்பட்டது' என்பது பொருள். சுவாமிக்கு சாற்றப்பட்ட மலர்கள், மலர் மாலைகள் ஆகியவற்றை அதிகாலைப் பூஜையின்போது களைவார்கள். அதைத் தரிசிப்பதே நிர்மால்ய தரிசனம்!

கேள்வி:- அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்கிறார்களே! அது எப்படி? (மு.தவச்செல்வன், கோயம்புத்தூர்)

பதில்:- பஞ்சபூதங்கள் வெளியே இருந்து, நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் அந்தப் பஞ்ச பூதங்களும்; பிண்டம் எனப்படும் நம் உடம்பில் இடம் பெற்றுள்ளன. பாதத்தில் இருந்து இடுப்பு வரை-நிலம்; கழிவு, இனப்பெருக்கப் பகுதிகள்-நீர்; மேல் வயிற்றில்-நெருப்பு; இதயம், நுரையீரல் பகுதிகளில்-காற்று; தலையில்-ஆகாயம் என, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளன. இத்தகவல்களைத் திருமந்திரத்தில் திருமூலர் விரிவாகக் கூறுகிறார். அடுத்து, நவ கோள்கள் எனப்படும் நவக்கிரகங்களும்; பிண்டமாகிய நம் உடம்பில் இடம் பெற்றிருப்பதாக சோதிட நூல்கள் கூறுகின்றன. சூரியன் - ஆத்மாவிலும், எலும்பிலும்; சந்திரன்-மனம், ரத்தம்; செவ்வாய், ராகு-உடல் பலம், மஜ்ஜை; புதன்-வாக்கு, தோல்; வியாழன்-ஞானம், தசை, மாமிசம்; வெள்ளி-காமம், இந்திரியம்; சனி, கேது-துக்கம், நரம்பு, தசை எனச் சோதிட நூல்கள் விவரிக்கின்றன.

கேள்வி:- மன அமைதிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரம் எது? (பா.செல்வகுமார்,திருநெல்வேலி)

பதில்:- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது; அவர் தினந்தோறும் பூஜையில் சொன்னது; "அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்! மன சஞ்சலம் தீரும்! அமைதியை அருள்வார் ஆறுமுகன்" என்பார். அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

1)எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!

சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்!

கந்தா! கதிர் வேலவனே! உமையாள்

மைந்தா! குமரா! மறை நாயகனே! (கந்தர் அனுபூதி)

2)அதிருங்கழல் பணிந்துன் அடியேனும்

அபயம் புகுவதென்று நிலை காண

இதயந் தனிலிருந்து க்ருபையாகி

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

எதிரங்கொருவர் இன்றி நடமாடும்

இறைவன் தனது பங்கின் உமை பாலா!

பதியெங்கிலும் இருந்து விளையாடி

பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ்

(இதயந்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-என்று நிறைவு செய்யவும்)

கேள்வி:- ஆலயத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கும், அதனை இத்தனை அடியில் நட வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மாற்ற வேண்டும் என்றெல்லாம் விதி உள்ளதா? (க.அருளரசன், திருப்பத்தூர்)

பதில்:- ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு ஏற்றபடி, அதாவது ஆலயத்திற்கு ஏற்றபடி உயரங்கள் உண்டு. மாற்றுவதற்குக் காலங்கள் கிடையாது; கொடி மரம் உடைந்தாலோ, சேதப்பட்டாேலா உடனே மாற்ற வேண்டும்.


Next Story