ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்


ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்
x

பஞ்ச பூதங்களான ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு எனும் ஐந்தையும், தெய்வ வடிவாகவே, தெய்வப் பிரதிநிதிகளாகவே, மறைநூல்கள் சொல்கின்றன.

கேள்வி:- பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் சிறப்புகள் என்ன? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)

பதில்:- பிரம்ம முகூர்த்தத்தில் லட்சுமிதேவி வீதி வலம் வருவாள். எந்த வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்களோ, அங்கே நுழைவாள். லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும். அடுத்தது; பிரம்ம முகூர்த்தத்தில், காற்று மண்டலம் மிகவும் தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையான காற்றை சுவாசித்து, ஆரோக்கிய செல்வத்தையும் அடையலாம். இவ்வாறு பல உண்டு.

கேள்வி:- மகாபாரதத்தில் வாரி வழங்கும் வள்ளலாகப் போற்றப்படும் கர்ணன், அன்னதானம் மட்டும் வழங்கவில்லை என்பது உண்மையா? (மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்)

பதில்:- மூல நூலான வியாச பாரதத்திலோ, வழி நூலான வில்லிபாரதத்திலோ இல்லாத தகவல் இது. பெரும் புலவரான புகழேந்திப் புலவர் பெயரில் வெளியான, 'பெரிய எழுத்து சிறுத்தொண்ட நாயனார் கதை' எனும் நூலில் இடம் பெற்றுள்ள தகவல் இது. சிறுத்தொண்ட நாயனாரின் முன் பிறவியில் அவர், கர்ணனாக இருந்தார் என்ற தகவலை, பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லவில்லை. பெரிய எழுத்து சிறுத்தொண்ட நாயனார் நூலில் இருந்து வெளிப்பட்ட கர்ணனைப் பற்றிய அந்தத் தகவல், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரவியது.

கேள்வி:- ஆன்மிகத்தின் நவீன வடிவம் தான் அறிவியலா? (கே.முருகன், திருவண்ணாமலை)

பதில்:- ஒப்புக்காக வேண்டுமானால், சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல! அறிவியலுக்கு எல்லை உண்டு. ஆன்மிகத்திற்கு எல்லை கிடையாது. கம்ப ராமாயணம், பெரிய புராணம் முதலான நூல்களில் அரும்பெரும் விஞ்ஞான உண்மைகள் இருந்தாலும், அவை ஆன்மிகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. ஆன்மிகம் அதாவது, ஆன்ம+ இகம்=ஆன்மிகம். இங்கு இருக்கும்போதே, அனைத்துப் பிரச்சினைகளிலும் இருந்து விடுபட்டு, அமைதியாக, நிம்மதியாக வாழ்வதே ஆன்மிகம். இதை விஞ்ஞானத்தால் தர முடியாது. விஞ்ஞானம் ஆசையை வளர்க்கும். ஆன்மிகமோ அமைதியைத் தரும். ஆகவே ஆன்மிகத்தின் நவீன வடிவம் தான் விஞ்ஞானம் என்று சொல்ல இயலாது.

கேள்வி:- தீட்சை வாங்கும் முறை, அதன்பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை என்ன? (த.அன்பரசி, அருப்புக்கோட்டை)

பதில்:- தீட்சை கொடுப்பவர், அந்தத் தீட்சா மந்திரத்தில் சித்தி பெற்றவராக இருக்க வேண்டும். அவருக்கு உண்டான குரு உப தேச மந்திரத்தை, முறைப்படி - எண்ணிக்கைப்படி நாள் தோறும் உச்சரிப்பவராக இருக்க வேண்டும். தீட்சை பெறுபவர் ஏற்கனவே குளித்திருந்தாலும், தீட்சை எனப்படும் குரு உபதேசம் பெறும்முன் குளிக்க வேண்டும்; தீட்சை பெற்ற பின், குரு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று தீட்சை விதிகளைப் பற்றி 'தீட்சா விதி' எனும் நூல் கூறுகிறது.

கேள்வி:- கடவுளின் பிரதிநிதிகள் என்று யாராவது உண்டா? (ச.பிரதிக்ஷா, விழுப்புரம்)

பதில்:- பஞ்ச பூதங்களான ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு எனும் ஐந்தையும், தெய்வ வடிவாகவே, தெய்வப் பிரதிநிதிகளாகவே, மறைநூல்கள் சொல்கின்றன. மேலும் 'ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்தபோது, உதவுவோன் இஷ்ட தெய்வம்' என்று 'அறப்பளீசுர சதகம்' சொல்கிறது. 'பகைவரின் கொடுமையால் துயரப்படும் போது, உதவி செய்து காப்பவன் இஷ்ட தெய்வம்' என்பது அதன் பொருள். உதவி செய்பவர் ஒவ்வொருவரும் தெய்வத்தின் பிரதிநிதிகள் தான்.

கேள்வி:- அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதுபோல தேங்காய், வெண் பூசணி, மிளகு முடிச்சு, எலுமிச்சை போன்றவற்றில் எல்லாம், கோவிலில் தீபம் ஏற்றுவது சரியா? (கே.முத்துவேல், கமுதி)

பதில்:- சரியில்லை. மகாகவி காளிதாசர் பெயரில் வழங்கும் 'உத்தர காலாமிர்தம்' என்ற ஜோதிட நூல், பழமையான தமிழ் ஜோதிட நூல்கள் ஆகியவற்றில் கூட, இப்படிப்பட்ட தீபங்களை ஏற்றச்சொல்லி சொல்லவில்லை.


Next Story