கல்வியின் சிறப்பு...


கல்வியின் சிறப்பு...
x

ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமை பெற கல்வி அறிவு உதவுகிறது. கல்வியின் மூலம் அவன் பெறக்கூடிய ஞானம், அவனது வாழ்வின் தேடல்களை அதிகரிக்கிறது. சிறந்த கல்வியின் மூலம் ஒருவரது வாழ்க்கை ஒழுக்கம் நிறைந்தாக அமைகிறது.

இந்த உலக வாழ்வின் நன்மை-தீமைகளை பிரித்தறியக்கூடிய ஞானத்தை கல்வி அறிவு வழங்குகிறது. கண்ணியம் மிக்க வாழ்வையும், கடமையை நிறைவேற்றும் பண்பையும் கல்வி அறிவு அளிக்கின்றது. 'கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு' என்ற முதுமொழியை நாம் அறிந்திருக்கலாம். செல்வங்களிலேயே யாராலும் திருட முடியாத, கொள்ளை அடிக்க முடியாத செல்வம் கல்விச்செல்வம் தான். சிறந்த கல்வியை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆகிறார்கள். அதனால் தான் ஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு மரியாதை செய்வதை நாம் காணலாம்.

கல்வியின் சிறப்பையும், கல்வி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக்கூறுகிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தீர்க்கமாக வற்புறுத்துகிறது. கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன.

இது குறித்த நபிமொழிகளை காண்போம்: 'கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுதர் (ரலி), நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

கல்வியை தேடுவது நமது கடமை மட்டுமல்ல, அந்தக்கல்வியின் மூலம் நாம் சொர்க்கம் செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு இஸ்லாமியரின் எதிர்பார்ப்பும் மறுமை உலகில் நாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதாகவே உள்ளது. அத்தகைய இலக்கை அடைய கல்வி வழிகாட்டுகிறது என்றால் அந்தக் கல்வியை தேடி அடைவதே நமது லட்சியமாக இருக்க வேண்டும். நாம் கல்வி கற்பது மட்டுமல்ல, அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்துகிறது: 'தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நூல்: இப்னுமாஜா)

இது குறித்த ஒரு சரித்திர நிகழ்வை காண்போம்:

"நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, 'அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்' என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)

'பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?' என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று' என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)

பத்ரு போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அந்தக்கால வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி உள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றலாம். அதன்படி வசதியானவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, வசதியில்லாத கைதிகளுக்கு நபிகளார் ஒரு சலுகை அளித்தார். அதாவது, ஒரு கைதி 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து வசதி இல்லாத எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் 'திண்ணைத் தோழர்கள்' என்று அழைக்கப்பட்டனர்.

நண்பர்களே, கல்வியின் சிறப்பை நாம் அறிந்துகொள்வதோடு, நாமும் சிறந்த கல்வியை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். நம்மைச் சேர்ந்தவர்களையும் கல்வி கற்கவும், பல கலைகளில் தேர்ச்சி பெறவும் ஊக்குவிக்க வேண்டும். நாம் கற்ற கல்வியை பயன்படுத்தி அதன் மூலம் நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பல பெறுவோம், ஆமின்.


Next Story