சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,
சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பேற்ற சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி சேலம் டவுன் சுகவனேசுவரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சேலம் அஸ்தம்பட்டி லட்சுமி சுந்தர கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுந்தரேஸ்வரருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் அஸ்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்காடு அடிவாரம் பஞ்சமுக விநாயகர் கோவிலில் உள்ள சேரகிரீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.
கரபுரநாதர் கோவில்
கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நேற்று பிரதோஷயொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கரபுரநாதர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி தேவர் மீது காட்சி தந்து அருள்பாலித்தார். இதில் உத்தமசோழபுரம், பூலாவரி, நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, அரியானூர், இளம்பிள்ளை, வீரபாண்டி, சிவதாபுரம், வேடுகத்தான் பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நந்தி பகவானுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து ஆராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சிவகாம சுந்தரி உடனமர் கைலாசநாதர் ரிஷிப வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு கோவிலை 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாதேஸ்வரன் கோவில்
ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று சனி பிரதோஷ தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து நந்தி தேவருக்கு சிறப்பு பூஜையும், பலவிதமான வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.