பழனி முருகன் கோவிலில் மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை
போகர் ஜெயந்தியையொட்டி, பழனி முருகன் கோவிலில் உள்ள மரகத லிங்கத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை, 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு. போகரின் ஜீவசமாதி பழனி கோவில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இங்கு போகரின் சீடரான புலிப்பாணி குடும்ப வாரிசுகள் பூஜை செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம். போகர் ஜீவசமாதியில் பிரசித்தி பெற்ற பச்சை மரகத லிங்கம் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் இந்த மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. அதன்படி போகர் ஜெயந்தியையொட்டி பழனி கோவிலில் உள்ள போகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் போகர் சித்தாந்த சபை சார்பில், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி போகர் சிலைக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பரதநாட்டியம், நந்தி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சித்தாந்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.