அத்ரி மகரிஷியின் மனக்குறையை போக்கிய ஈசன்.. சிவசைலநாதர் ஆலய சிறப்புகள்
அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே என்று அத்ரி மகரிஷி வருந்தினார்.
தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஆலயம் கடனா ஆற்றின் தென்கரையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் உற்பத்தியாகும் கடனா, தாமிரபரணியின் முக்கிய உபநதிகளில் ஒன்றாகும்.
தென்காசி-அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கடனா அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும்.
மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட எழில்மிகுந்த இந்த ஆலயத்தின் மேற்கேயும் தெற்கேயும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளாக விளங்கும் திரிகூடபர்வதமும், வெள்ளிமலையும், வடக்கே முள்ளி மலையும் உள்ளன.
கோவிலின் முன்நின்று நோக்கினால் மேற்கேயும், தெற்கேயும் மலையடிவாரம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை போர்த்திய வயல்வெளிகள். அமைதியான சூழ்நிலை, தூய்மையான பொதிகை தென்றல் என்று இயற்கையின் அருட்கொடைக்கு பஞ்சம் இல்லாத பூமி. தென்மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்தின் குளுகுளு சீசனை இங்கேயும் அனுபவிக்கலாம்.
தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் சிவசைலநாதர் கோவிலின் தூண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புராண சம்பவங்களை சொல்லும் அழகிய ஓவியங்கள் ஆங்காங்கே வரையப்பட்டு இருக்கின்றன.
ஸ்தல புராணம்
அம்பாள் கல்யாணியுடன் ஈசன் குடிகொண்டிருக்கும் இந்த சிவசைலம் முன்னொரு காலத்தில் சோலைகள் நிறைந்த கடம்ப வனமாக இருந்தது. சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்த பூமி.
சிவபெருமானின் திருமண கோலத்தை காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் கைலாய மலைக்கு சென்றதால், பாரம் தாங்காமல் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சரி செய்ய ஈசன், குறுமுனியான அகத்தியரை தென் கோடியில் உள்ள பொதிகைக்கு அனுப்பி வைத்தார்.
ஈசனின் ஆணையை சிரமேற்கொண்டு அத்ரி மகரிஷியுடன் தென்திசை வந்த அகத்தியர் பொதிகை மலையில் குடிசை அமைத்து தவவாழ்வு மேற்கொண்டார். தனது திருமணம் முடிந்ததும் அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் பார்வதிதேவியுடன் காட்சி அளித்தார். அதாவது, பொதிகை மலையின் அடிவாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
அகத்தியருடன் வந்த மற்றொரு மகரிஷியான அத்ரிமுனிவர் பாபநாசத்தில் இருந்து வடமேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் குடில் அமைத்து மனைவி அனுசூயையுடனும், கோரக்கர் போன்ற சீடர்களுடனும் வாழ்ந்து வந்தார். 'சைலலிங்கம்' என்ற திருப்பெயர் கொண்ட லிங்கத்தை அவர் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜை செய்து வந்தார்.
ஒரு சமயம் அகத்தியரை தரிசித்துவிட்டு வந்த அத்ரி மகரிஷிக்கு ஒரு மனக்குறை தோன்றியது. ''அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே!'' என்று வருந்தினார். தனது மனக்குறையை அடிக்கடி ஈசனிடம் முறையிடத் தொடங்கினார்.
அவரது வேண்டுதலுக்கு செவிமடுத்த சிவபெருமான் அசரீரியாக, ''மகரிஷியே சிவசைலர் என்ற பெயருடன் சுயம்புவாக நான் கடனா நதிக்கரையில் வாசம் செய்து வருகிறேன். என்னை வெளிக்கொணர்ந்து நீ பூஜிப்பாயாக'' என கூறி மறைந்தார்.
இந்த நிலையில் அத்ரி முனிவரின் சீடர்கள் ஒரு நாள் பூஜைக்காக பூப்பறிக்க சென்றபோது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாக பால் சுரப்பதை கண்டு அதிசயித்து நின்றனர். பின்னர் அந்த இடத்தை அத்ரி முனிவரும் சீடர்களுடம் தோண்டிப்பார்த்தபோது அங்கு சுயம்பு வடிவில் லிங்கம் காட்சி அளித்தது. அதை எடுத்து அத்ரி முனிவர் பூஜித்து வணங்கினார். அந்த இடம்தான் தற்போது பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அமர்ந்துள்ள சிவசைலம்.
சிவசைலத்துக்கு நேராக மேற்கே சற்று தொலைவில் உள்ள திரிகூடபர்வதத்தில் அத்ரி மகரிஷியின் குடில் அமைந்திருந்தது. அவர் தினமும் தன்னை தரிசனம் செய்வதற்காகவே சிவசைலம் கோவிலில் ஈசன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
அத்ரி மகரிஷி வாழ்ந்த இடத்தில் தற்போது சிறிய கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். கடனா அணைக்கு மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும்.
அத்ரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதால் திரிகூடபர்வதம் 'அத்ரி மலை' என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மனும், இந்திரனும் வழிபட்ட பெருமைமிக்க புண்ணிய தலம் சிவசைலநாதர் கோவில்.