108 தீர்த்தங்களைக் கொண்ட முக்திநாத்


108 தீர்த்தங்களைக் கொண்ட முக்திநாத்
x

நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில், இமயமலை பள்ளத்தாக்கில் 3,610 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது, முக்திநாத் திருத்தலம்.

வைணவ சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு, மகாவிஷ்ணு கோவில் கொண்டிருக்கும் 108 திவ்ய தேசங்களும், அங்குள்ள தீர்த்தங்களும் மிகவும் புனிதமானவை. அவற்றை கண்டு வழிபட வேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் ஆவல்களில் ஒன்றாகவும் இருக்கும். ஆன்மிகத்தைப் பின்பற்றும் அனைவருமே இதுபோன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும், அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றும் தலமாகவும், பாவங்களைப் போக்கி முக்தியை வழங்கும் தலமாகவும், முக்திநாத் திருத்தலம் திகழ்கிறது.

நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில், இமயமலை பள்ளத்தாக்கில் 3,610 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது, முக்திநாத் திருத்தலம். இது இந்து மற்றும் பவுத்தர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105-வது திவ்ய தேசமாக புகழப்படுகிறது.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் இந்த திவ்ய தேசம் பற்றி பாடியுள்ளனர். இங்கு பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராம கல்லை, நாராயணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அம்மனை முன்னிலைப்படுத்தி வழிபடுபவர்களை, சாக்தர்கள் என்பார்கள். இவர்கள், முக்திநாத் திருத்தலத்தை அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகப் பார்க்கிறார்கள். திபெத்திய மக்கள், முக்திநாத் திருத்தலத்தை `நூறு புனித நீர்நிலைகள்' என்று போற்றுகின்றனர். ஏனெனில் இங்கு நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களின் தீர்த்தங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை பறைசாற்றும் வகையில், இந்த ஆலயத்தைச் சுற்றிலும் 108 குழாய்கள் அமைத்து, அதன்

வழியாக நீர் வழியும்படி செய்திருக்கின்றனர். இது 108 திவ்ய தேசங்களின் தீர்த்தங்கள் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்நிலையில் வரிசையாக நீராடி வருபவர்களுக்கு முக்திபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த முக்திநாத் திருத்தலத்தை மார்ச் முதல் ஜூன் மாதம் வரை தரிசனம் செய்வது ஏதுவாக இருக்கும். மற்ற மாதங்களில் இங்கு நிலவும் கடும் குளிர் மற்றும் மேகமூட்டம், முக்திநாத் செல்லும் பயணத்திற்கு தடையாகவும், கடினத்தை ஏற்படுத்துவதாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது.


Next Story