சேத்துனாம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
சேத்துனாம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்தியூர்
சேத்துனாம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பத்ரகாளியம்மன் கோவில்
அந்தியூர் அருகே சேத்துனாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குண்டம் விழா
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. இதற்காக கோவில் முன்பு 60 அடி நீளம் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பலர் ஒன்றன்பின் ஒன்றாக தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிறுவர், சிறுமிகள், கைக்குழந்தையுடன் பக்தர்கள் பலர் குண்டம் இறங்கினர். அதுமட்டுமின்றி தீச்சட்டி ஏந்தியபடியும், அலகு குத்தியும் பக்தர்கள் தீ மிதித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.