சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா;கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா;கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவையொட்டி திரளான பக்தர்கள் கத்தி போட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஈரோடு

சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவையொட்டி திரளான பக்தர்கள் கத்தி போட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் கத்தி போட்டு தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா தொடங்கியது. இதையடுத்து காலை 10 மணிக்கு சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பவானி ஆற்றின் கரையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடினார்கள். அப்போது சக்தியை அழைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கத்தி போட்டு...

இதைத்தொடர்ந்து மஞ்சள் வேட்டி கட்டிய வீர குமாரர்கள் எனும் பக்தர்கள் வரிசை வரிசையாக நின்று கொண்டு வாத்திய இசைக்கு ஏற்ப 2 கைகளிலும் நீளமான கத்தியால் முதுகு மற்றும் நெஞ்சிலே போட்டு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஊர்வலம் செல்லும் வழியில் அம்மனை பலமுறை பாட்டுப்பாடி அழைத்தார்கள். இதில் ஏராளமான பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தார்கள். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் மதியம் 12 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைெயாட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பவானிசாகர்

இதேபோல் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க பவானி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆற்றிலிருந்து கோவில் வரை வீரகுமாரர்கள் வெற்றுடலில் கத்தி போட்டபடி நடனமாடி சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை பண்டார மெரவனை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட சவுடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவிலில் தொடங்கிய திருவீதி உலா பங்களாமேடு, பாலாஜி தியேட்டர், அண்ணா நகர், விக்னேஷ் நகர், வினோபாஜி வீதி, தேவாங்கபுரம் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.


Next Story