சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா


சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா
x

உலக நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு தளிகை நெய்வேத்தியங்கள் படைக்கப்படாது.

தமிழகத்தில் சக்தி தலங்களில் முதன்மையாக கருதப்படுவது, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இக்கோவிலில் தினந்தோறும் திருவிழா என்றபோதும், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரைத் தேர் பெருவிழா வெகு சிறப்பு வாய்ந்தது.

பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து, 28 நாட்கள், உலக மக்கள் நன்மைக்காக அம்மனே இங்கு பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிப்பெரும் சிறப்புக்குரியது. பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு தளிகை நெய்வேத்தியங்கள் படைக்கப்படாது. மாறாக, இளநீர், நீர்மோர், பானகம், கரும்புச்சாறு, துள்ளு மாவு போன்றவை மட்டுமே பிரசாதமாக படைக்கப்படும்.

உலக மக்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்மனை குளிர்விக்கும் வகையில் அனைத்து வண்ண மலர்கள், வாசனை மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பூச்சொரிதல் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவதை காண கண் கோடி வேண்டும். மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் நிறைவுச் செய்யும் நாளில், சித்திரைத் தேர் பெருவிழா தேரோட்ட கொடியேற்றம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story