புனிதம் மிகுந்த ராமர் ஆலயங்கள்
இந்தியாவில் ராமரின் ஆலயங்கள் அமைந்த சில இடங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
ராமர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது அவரது பிறந்த பூமியான, அயோத்திதான். இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக அயோத்தி இருக்கிறது. சரயு நதியின் ஆற்றங்கரையில் அமைந்த இந்த தலம், இந்துக்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்று. இது தவிர இந்தியாவில் ராமரின் ஆலயங்கள் அமைந்த சில இடங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
ராம் மந்திர்
புவனேஸ்வரில் உள்ள காரவேல் நகரில் இக்கோவில் அமைந்துள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த ராமர் ஆலயம், இப்பகுதி பக்தர்களின் புனித தலமாக இருக்கிறது. இந்தக் கோவிலில் ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் அழகிய உருவங்கள் உள்ளன. இது ஒரு தனியார் அறக்கட்டளையால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மேலும், கோவில் வளாகத்தில் அனுமன், சிவன் உள்பட மற்ற தெய்வங்களுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன.
ராமசுவாமி கோவில்
தமிழ்நாட்டில் ராமருடன் தொடர்புடைய ஆலயமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதர் கோவில் இருந்தாலும், அது சிவபெருமானுக்குரிய ஆலயமாகும். ஆனால் அதே தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இருக்கிறது ராமருக்கான ராமசுவாமி கோவில். இது 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் ராமாயண காவியத்தின் ஓவியங்களாலும், சிற்பங்களாலும் நிரம்பியுள்ளது. நுணுக்கமான கலைப்படைப்புகளை இந்தக் கோவிலில் நாம் காண முடியும். கருவறையில் ராமரும், சீதா தேவியும் திருமணக் கோலத்தில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்களுடன் சத்ருக்னன் ராமரின் இடது புறத்தில் சாமரம் வீசியபடியும், பரதன் குடை பிடித்தபடியும், லட்சுமணன் வலது புறத்தில் வில்லை கையில் பிடித்தபடியும் இருக்கின்றனர். அவர்களுடன் அனுமனும் வீற்றிருக்கிறார். இத்தல இறைவனை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் பத்ராசலம் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை 'பத்ராசலம் கோவில்' என்றால் தான் பலருக்கும் தெரியும். ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் பத்ராசலத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்ணசாலாவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பின் ராவணனால் சீதை கடத்தப்பட்டதும், சீதையை மீட்பதற்காக, இலங்கை செல்லும் வழியில் ராமரும், லட்சுமணரும் கோதாவரி ஆற்றைக் கடந்ததாகவும், அந்த இடத்தில்தான் இந்த பத்ராசலம் ஆலயம் அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ராமநவமி மற்றும் ராம- சீதா திருமண நாளில் இந்த ஆலயம் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் காணப்படும்.
கோதண்டராமர் கோவில்
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஹிரேமகளூரில் இருக்கிறது, இந்த ஆலயம். கோதண்டராமர் கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில் மூலவர் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளார். பொதுவாக அனைத்து ராமர் ஆலயங்களிலும் ராமருக்கு இடது பக்கத்தில்தான் சீதாதேவி இடம் பெற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் ராமபிரானின் வலது பக்கத்தில் சீதையின் திருவுருவம் இருக்கிறது. ராமரின் பக்தர் ஒருவர், ராமர்- சீதையின் திருமணத்தை காண விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமபிரான் இங்கு காட்சி கொடுத்ததாகவும் தல வரலாறு சொல்கிறது. கருவறையில் ராமர்- சீதை தவிர, லட்சுமணனும் அருள்பாலிக்கிறார்.
ராம் தீரத் கோவில்
அமிர்தசரஸ் தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் மேற்கே சோகவான் சாலையில் இந்த ராமர் கோவில் அமைந்துள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதா தேவி தஞ்சமடைந்த இடம் இது. அதோடு லவன், குசன் ஆகிய பிள்ளைகளை சீதாதேவி பெற்றெடுத்த இடமும் இதுதான் என்கிறார்கள். இங்கு சீதா தேவி குளிப்பதற்குப் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறும் உள்ளது. எனவே, இது இந்தியாவில் உள்ள மிகவும் புனிதமான ராமர் கோவில்களில் ஒன்றாகும்.
ராமராஜா கோவில்
மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சா என்ற இடத்தில் பெட்வா ஆற்றின் கரையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசனின் மனைவியான ஓர்ச்சா ராணி, ராமபிரானின் தீவிரமான பக்தை. அவள் ஒரு முறை ராமபிரானை தரிசிப்பதற்காக அயோத்தி சென்றாள். அங்கு இறைவனை வணங்கிய பின்னர், தன்னுடைய ஊரிலும் ராமரின் ஆலயத்தை நிறுவ வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக அயோத்தியில் இருந்து ராமபிரானின் உருவச் சிலையை எடுத்து வந்தாள். அவளோடு புறப்படுகையில், ராமபிரான் தான் ஓரிடத்தில் நிலைபெற்று விட்டால், அங்கேயே தான் இருப்பேன் என்று கூறினார்.அதன்படி அயோத்தியில் இருந்து ராமபிரான் சிலையை எடுத்து வந்த ராணி, ஆலயம் அமைக்கும் வரை அந்த சிலையை தன்னுடைய அரண்மனையில் வைத்து பூஜித்தாள். ஆலயம் அமைப்பதற்காக இடத்தைத் தேர்வு செய்தபின், அந்த சிலையை எடுத்துச் செல்ல முயன்றபோது, சிலை ஒரு அங்குலம் கூட நகரவில்லை. எனவே ராணி வசித்து வந்த அரண்மனையே, ராமரின் ஆலயமாக மாறியது. இத்தல இறைவன் 'ராமராஜா' என்று அழைக்கப்படுகிறார். இங்கே ராமா் கடவுளாக மட்டுமின்றி, ஒரு அரசனாகவும் ஆட்சி செய்கிறார். ராமநவமி தினத்தில், அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கி சல்யூட் மரியாதை இந்த ராமபிரானுக்கு அளிக்கப்படுகிறது.
காலாராம் கோவில்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது, இந்த ஆலயம். ராமர் வனவாசத்தின் போது வாழ்ந்த இடத்திலேயே இந்த கோவில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பழமையான மரத்தால் ஆன ஆலயம் இருந்த இடத்தில், சர்தார் ரங்கராவ் ஓதேகர் என்பவரால், 17-ம் நூற்றாண்டில் தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலய கட்டுமானப் பணி சுமார் 12 ஆண்டு காலம் நீடித்திருக்கிறது. மேற்கு இந்தியாவில் அமைந்த மிகச் சிறந்த ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலைகள் கருங்கற்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றும் சுமார் 12 அடி உயரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரகுநாத் கோவில்
ஜம்மு நகரில் அமைந்துள்ள வட இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகங்களில் ஒன்று இது. இது 7 கோவில்களை உள்ளடக்கிய இடமாக இருக்கிறது. 1853-1860 காலகட்டத்தில் மகாராஜா குலாப் சிங், அவரது மகன் மகாராஜ் ரன்பீர் சிங் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் பல தெய்வங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான கடவுளாக விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் அருள்கிறார். கட்டிடக்கலையின் அசாதாரண உருவாக்கமாக இந்த இடம் இருக்கிறது.
திரிபிராயர் கோவில்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள மூலவரான ராமபிரான், 'திரிபிரயாரப்பன்' அல்லது 'திரிபிராயர் தேவர்' என்று அழைக்கப்படுகிறார். புராணத்தின் படி, இந்த ஆலயத்தில் உள்ள ராமபிரானை, துவாபர யுகத்தின் போது கிருஷ்ணர் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் இறுதி காலத்தில் துவாரகை கடலில் மூழ்கியபோது, இந்த சிலையும் கடலில் மூழ்கி, கேரளாவின் செட்டுவா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்த ஆட்சியாளரிடம் அந்த சிலையை கொடுக்க, திரிபிரயாரில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உண்டாக்கப்பட்டது. இந்த ராமபிரான் நான்கு கரங்களுடன், அந்த கரங்களில் சங்கு, வட்டில், வில், மாலை ஏந்தியபடி காட்சி தருகிறார்.