திருப்பதி லட்டு தயாரிக்க தாமஸ் என்பவருக்கு ஒப்பந்தமா..? வைரலாக பரவிய தகவல்.. தேவஸ்தானம் மறுப்பு


திருப்பதி லட்டு தயாரிக்க தாமஸ் என்பவருக்கு ஒப்பந்தமா..?  வைரலாக பரவிய தகவல்
x

லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் புகழ்பெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சமையல் அறை தவிர வேறு எங்கும் இந்த லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுவதில்லை. நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஏராளமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிப்பு தொடர்பான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், லட்டு தயாரிக்கும் ஒப்பந்தத்தை தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு தெரியவர, உடனடியாக மறுப்பு தெரிவித்ததுடன், பக்தர்களுக்கு விளக்கமும் அளித்துள்ளது.

இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பது தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வன்மையாக கண்டிக்கிறது. லட்டு தயாரிப்பு தொடர்பான பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம். லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பழங்காலத்திலிருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான கடமைகளை அவர்கள் செய்கிறார்கள். அவர்களில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுகளை தயாரிக்கவும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள், லட்டுகளை கொண்டு சென்று விநியோகம் செய்தல், பாதுகாத்தல், சமையலறை கூடத்தின் தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு கடமைகளை செய்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story