இறைவனையும், ஆன்மாவையும் இணைக்கும் 'ராஜயோக தியானம்'


இறைவனையும், ஆன்மாவையும் இணைக்கும் ராஜயோக தியானம்
x

ஒளி வடிவான இறைவனை அடைவதற்கு, பிரம்மாகுமாரிகள் இயக்கம் காட்டும் வழி தியானம் (யோகம்) ஆகும்.

நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, அதனை இறைவன் என்கிறோம். அந்த இறைவனை அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் ஏராளமான வழிகள் பல சான்றோர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற பாதைகள் இருப்பினும், அவை சென்றடையும் இடம், இறைவன் திருவடியே. உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, நீயே கடவுள் என்ற நிலைப்பாடு போன்றவற்றுடன், இறைவன் ஒளி வடிவானவன் என்பதும் ஒரு தத்துவம். அந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக அமைப்புகளில் ஒன்றுதான், பிரம்மாகுமாரிகள் இயக்கம்.

ஒளி வடிவான இறைவனை அடைவதற்கு, பிரம்மாகுமாரிகள் இயக்கம் காட்டும் வழி தியானம் (யோகம்) ஆகும். தியானம் என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக எல்லா விதமான தேகப் பயிற்சிகளையும் யோகம் என்றே அழைக்கின்றனர். குறிப்பாக மூச்சுப் பயிற்சி, உடலை வளைத்து, வருத்தி செய்வது யோகம் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் பிரம்மாகுமாரிகள் இயக்கம், இதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துரைக்கிறது.

'மனிதனின் ஆன்மாவானது, பரம்பொருளான இறைவனுடன் தொடர்பு கொள்ளுதல், ஒன்றிவிடுதல், பிணைத்தல். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் ஏற்படும் தொடர்பு அல்லது உறவே, ஆன்மிக ரீதியில் தியானம் (யோகம்). இன்னும் தெளிவுபடுத்துவதென்றால், மனதை ஒருநிலைப்படுத்தி, ஆழமான அன்புடன், உயரிய நோக்கத்தின் அடிப்படையில் புத்தியை இறைவனிடம் ஒருமுகப்படுத்துதலே தியானம் ஆகும். இதனால் மனிதன் தெய்வீகத் தன்மையை அடைகிறான். தான் தூய்மையடைவதோடு மட்டுமின்றி, அனைத்து விகாரகங்களையும் வெற்றி கண்டு, ஆழ்ந்த அமைதியையும், தெய்வீக பேரானந்தத்தையும் பெறுகிறான்' என்கிறது பிரம்மாகுமாரிகள் அமைப்பு.

இந்த அமைப்பிற்கு விதை போட்டவர், தாதா லேக்ராஜ். பிரித்தானிய இந்தியாவின் சிந்து மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தான்) 1876-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். தந்தையை போல் இல்லாமல், வியாபாரியாக மாறினார். ஆரம்பத்தில் கோதுமை வியாபாரம் செய்த அவர், அதில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்தார். அது ஒரு பெரும் தொகையாக மாறிய தருணத்தில் வைர வியாபாரத்தில் இறங்கினார். இதனால் பெரும் செல்வந்தர்களும், அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயேர்களுக்கும் தெரிந்த நபராக மாறினார்.

தன்னுடைய 60 வயதை நெருங்கும் வேளையில், அவருக்குள் இறையருள் இருப்பதை உணர்ந்தார். 1937-ம் ஆண்டு சிந்து மகாணத்தின் ஹைதராபாத்தில் 'ஓம் மண்டலி' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். இறைவன் ஒளி வடிவானவன். மனித உடல் அழிவுக்குரியது. ஆனால் ஆன்மா அந்த இறைவனைச் சென்றடையும். அதனை தியானத்தின் மூலமாக நாம் உணர முடியும் என்பதை எடுத்துரைத்தார். இந்த அமைப்பில் இணைந்தவர்கள், தாதா லேக்ராஜை, 'பிரம்மா பாபா' என்று அழைத்தனர்.

இந்தியா சுதந்திரம் அடையும் நேரத்தில் ஏற்பட்ட இரு நாட்டு குழப்பங்களால், தன்னுடைய தலைமையகத்தை ராஜஸ்தான் மாநிலம் அபுமலையில் அமைத்தார். பெண்கள்தான் இந்த உலகத்தின் முன்னோடி. அவர்களால்தான் இந்த உலகம் அமைதியை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை உணர்ந்த பிரம்மா பாபா, தன்னுடைய அமைப்பை, பெண்களிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இந்த அமைப்பு 'பிரம்மாகுமாரிகள் இயக்கம்' என்று மாறியது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் புனித சகோதரிகளின் நிர்வாகத்தில் இயங்கி வரும் இந்த இயக்கத்தில், முடிவு எடுப்பதும், செயலாற்றுவதும், ஆன்மிகப் பணிகளைச் செய்வதும் பெண்கள்தான். தற்போது இதன் நிர்வாக தலைவராக ரத்தன் மோகினி தாதி இருக்கிறார்.

1970-ம் ஆண்டு பிரம்மாகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த சிவகன்யா, லட்சுமி, சாந்தா ஆகிய சகோதரிகள், தமிழ்நாட்டின் சென்னைக்கு வருகை புரிந்தனர். அவர்களின் தன்னலமற்ற முயற்சி, தியாகம், உறுதி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென்கேரளத்தை ஒருங்கிணைத்த தமிழ்நாடு மண்டலமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கிறது. இந்த மண்டலத்தில் 350-க்கும் மேற்பட்ட தியான நிலையங்களுடன் பிரம்மாகுமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. மனித குல ஆன்மிக சேவையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளை கடந்து விட்டதை கொண்டாடும் வகையில், வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் 'பிரம்மாகுமாரிகள் தமிழக மண்டல பொன்விழா' சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த அமைப்பு சார்பில், ஜாதி, மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இலவச தியானப் பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே மனமுவந்து செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் 147 நாடுகளில் 8 ஆயிரத்து 500 கிளைகளைக் கொண்டு பிரம்மாகுமாரிகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம், மன அழுத்தம் உள்ள பணிகளைச் செய்பவர்களுக்கும், அமைதியை விரும்புபவர்களுக்கும் தியானத்தின் வாயிலாக அமைதியைப் பெற்றுத் தருவதோடு, அந்த தியானத்தின் மூலமாக இறைவனை உணரவும் வழிகாட்டப்படுகிறது.

தியானத்தின் முதல்படி

'நான் ஒரு ஆன்மா' என்ற உணர்வு ஏற்படாதவரை, ஒருவரால் இறைவனுடன் எந்த உறவும் கொள்ள முடியாது. பரமாத்மாவுடனான மனிதனின் உறவு, உடலால் அழியக்கூடிய தற்காலிகமானது அல்ல. ஆன்மா என்னும் மனதால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையான உறவு. எனவே தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள், முதலில் தன்னை ஆன்மா என்று உணர வேண்டும். அதற்கு தடையாக இருப்பது உடல். அதுதான் ஆன்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே சுவரை எழுப்புகிறது. உடலின் மீதான மோகம், இறைவனிடம் இருந்து நாம் விலகவும், ஆத்மா என்ற உணர்வு, நாம் இறைவனிடம் நெருங்கவும் முதல் படியாக அமைந்துள்ளது.

நல்லுலகம் அமைய உதவும் நற்பண்புகள்

1. ஆர்வம், தூய்மை, புறச்சுத்தம்.

2. அன்பு, நல்லெண்ணம்.

3. பணிவு, மன்னித்தல்.

4. ஒரே சீரான மனநிலை, அமைதி.

5. பொறுமை, நல்லிணக்கம்.

6. மரியாதை, சுயகவுரவம்.

7. ஆக்கப்பூர்வ நோக்கம், சுயக்கட்டுப்பாடு.

8. நடுநிலையோடு பொறுப்பு வகித்தல்,

பற்றற்றநிலை.

9. உண்மை.

10. எளிமை, திருப்தி.

11. நேர்மை, நீதி.

12. உலக சகோதரத்துவம்.

தியானம் எளிமையானது

இன்றைக்கு யோகப் பயிற்சி என்பது, உடலை வருத்திச் செய்யும் பயிற்சியாக மாறிவிட்டது. அது ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் ஆன்மாவை, பரமாத்மாவுடன் இணைக்க ஒதுபோதும் உதவாது. உடலை வருத்தும் விரதம் இருப்பது, தவம் மேற்கொள்வது போன்ற முயற்சிகளும் கூட, உடலின் மீதான அடிப்படை செயல்களில் இறங்க தூண்டுகோலாக மாறிவிடும். புத்தி அல்லது ஞானத்தின் அடிப்படையில் செய்யப்படுவதே 'தியானம்' ஆகும். இறைவனையே சிந்தித்தபடி இருந்து, அவனிடம் நம் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும். அவ்வாறு செய்வதே எளிய ராஜயோகமாகும்.


Next Story