பூரியில் பஹுதா யாத்திரை கோலாகலம்: கோவில் நோக்கி புறப்பட்டது ஜெகநாதர் தேர்


Lord Jagannaths return car festival begins
x

பாரம்பரிய வழக்கப்படி பூரியின் பட்டத்து மன்னர் தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தும், பக்தர்கள் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.

பூரி:

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டின் ரத யாத்திரை கடந்த 7-ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.

மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி மரத் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தபின்னர், பூரியின் பட்டத்து மன்னர், சேர பஹன்ரா (தேர் துடைத்தல்) என்ற சடங்கை செய்தார். பாரம்பரிய வழக்கப்படி தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தார்.

இந்த சடங்கு முடிந்ததும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர். அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்தனர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்கள், 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்தன. அங்கு ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகிய தெய்வங்கள் ஓய்வெடுத்தன. அவர்கள் பிறந்த இடமாக கருதப்படும் குண்டிச்சா கோவிலில் 7 நாட்கள் தங்கியிருந்தனர்.

விழாவின் 9-வது நாளான இன்று திரும்பும் பயணம் தொடங்கியது. இது பஹுதா யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று மாலையில் மூன்று தேர்களும் குண்டிச்சா கோவிலில் இருந்து புறப்பட்டன. பாரம்பரிய வழக்கப்படி பூரியின் பட்டத்து மன்னர் தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தும், பக்தர்கள் தேர்களை இழுக்கத் தொடங்கினர். இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு... https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story