பிரார்த்தனைகள் நிறைவேறும்...விரும்பியது கிடைக்கும்...
ஏதோ ஒரு காரியத்திற்காக நாம் இறைவனை எதிர்நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்துகொண்டே இருக்கிறோம். பிரார்த்தனைக்கான பதில்கள் தாமதமடையும் போது உடலிலும், உள்ளத்திலும் துயரம் எட்டிப்பார்க்கிறது.
அன்பானவர்களே, இந்த உலக வாழ்க்கை ஆசைகளாலும், எதிர்பார்ப்புகளாலும் நிரம்பியது. விரும்பிய கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, திருமணம், குழந்தைப்பேறு, நோயற்ற வாழ்வு, சொந்த வீடு-வாகனம், கடன் இல்லாத வாழ்க்கை... என்று ஆசைகள், தேவைகள் பட்டியல் பெரிதாக நீண்டு கொண்டே இருக்கும்.
இவ்வாறு ஏதோ ஒரு காரியத்திற்காக நாம் இறைவனை எதிர்நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்துகொண்டே இருக்கிறோம். மனிதன் அவசரக்காரன். தான் நினைத்தது உடனே நடந்துவிட வேண்டும் என்று துடிப்புடன் பிரார்த்தனை செய்கின்றான்.
நினைத்தது நிறைவேற நெடுநாட்களாக பிரார்த்தனையுடன் காத்திருப்பவர்களும் உண்டு. அதேநேரத்தில், பிரார்த்தனைக்கான பதில்கள் தாமதமடையும் போது உடலிலும், உள்ளத்திலும் துயரம் எட்டிப்பார்க்கிறது. மனது சோர்வடைந்து சலிப்புடன் விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஆனால் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்".
பரிசுத்த வேதாகமத்தில் இது தொடர்பான ஒரு நிகழ்வு மிக அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதை நாம் காண்போம்.
எருசலேம் நகரில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்த குளத்து நீர் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே எப்போதாவது ஒரு முறை இறங்கி தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கிய பின்பு யார் முந்தி, முதலில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட நோயாளியாக இருந்தாலும் உடனே குணமடைவான்.
இத்தகைய சிறப்பு மிக்க அந்த குளத்திற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. இந்த மண்டபங்களிலே பார்வை இழந்தவர்கள், ஊனமுற்றவர்கள், பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருப்பார்கள். இவர்கள் அந்த குளத்து தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்த குளத்தின் மண்டபத்தில் 38 ஆண்டு களாக நோயுடன் ஒரு மனிதன் இருந்தான். ஒவ்வொரு முறையும் குளத்தில் தண்ணீர் கலக்கப்படும் போதும், யாராவது ஒருவர் அவனுக்கு முன்னே சென்று குளத்தில் இறங்கி குணமடைந்து சென்று விடுவார்கள். ஆனால் இவனுக்கு உதவி செய்வதற்கு, இவனைத் தூக்கிச்செல்வதற்கு யாருமே இல்லை.
உதவியற்ற நிலையில், கைவிடப்பட்ட நிலையில் படுத்திருந்த அவனை இயேசு கண்டுகொண்டார். அவன் நெடுங்காலமாய் வியாதிப்பட்டவன் என்று அறிந்து, "நீ குணமடைய வேண்டுமென்று விரும்புகிறாயா?" என்று அவனிடம் கேட்டார்.
அதற்கு அவன், "ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுவதற்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளே வேறொ ருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான்" என்றான்.
இயேசு அவனை நோக்கி; "எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட" என்றார்.
இயேசுவின் மகிமையால் உடனே அந்த மனிதன் குணமடைந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான்.
இன்றைக்கு நாமும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் நெடுங்காலமாய் காத்திருக்கின்றோமா?, கவலைப்பட வேண்டாம்.
"நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும், விரும்பினது வரும் போதோ ஜீவ விருட்சம் போல் இருக்கும்" என்று வேதம் சொல்கிறது.
ஆம், நாம் காத்திருக்கின்ற காரியங்களை இறைமகன் இயேசுவிடம் கூறி, அந்த காரியத்தை அவரிடமே ஒப்புக்கொடுக்கும் போது, நிச்சயமாகவே குறித்த காரியத்தில் அவர் வெற்றியைத் தருவார். ஏன் எனில் அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. "காரிய சித்தியோ கர்த்தராலே வரும்" என்று வேதம் கூறுகிறது.
வேதம் சொல்கிறது, "தேவன் தம்மை நோக்கி இரவும், பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விசயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்".
ஆகவே, இன்றே நம்முடைய கவலைகளை, மன விருப்பங்களை, தேவைகளை இயேசுவிடத்தில் தெரிவிப்போம். பொறுமையுடன் காத்திருப்போம். அவர் அதிசீக்கிரத்திலே நம்முடைய காரியங்களில் வெற்றி தந்து, நிறைவேற்றி நமக்கு நியாயம் செய்வார்.