பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு


பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 27 March 2024 3:58 PM IST (Updated: 27 March 2024 6:01 PM IST)
t-max-icont-min-icon

தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சியில், வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.

பழனி,

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திரம், 'தீர்த்த காவடி' திருவிழா என அழைக்கப்படுகிறது. அதாவது கோடைகாலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக சுமந்து பழனிக்கு வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.

முன்னதாக இன்று காலை 7.20 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புதுச்சேரி சப்பரத்தில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருஊடல் நிகழ்ச்சி அரங்கேறியது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொண்டார்.

அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார், 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை தெய்வானை அம்மனை சமாதானம் செய்து பாடினார். அப்போது, வள்ளியும், தெய்வானையும் ஒருவரே, என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடைதிறந்து, முத்துக்குமாரசுவாமியுடன் தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story