புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெருமாள் மலை
ஈரோட்டை அடுத்த பெருமாள் மலையில் மலை மீது மங்களகிரி பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் மலையில் உள்ள படியில் ஏறி சென்று கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை வழிபட்டனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். இதையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோபி
இதேபோல் கோபி அருகே உள்ள மூலவாய்க்காலில் ஸ்ரீதேவி, பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமைையயொட்டி நேற்று காலை 8 மணி அளவில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கோபி, புதுவள்ளியம்பாளையம், பழைய வள்ளியாம்பாளையம், கரட்டடிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில், அளுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோபி அக்ரஹாரம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு துளசி மற்றும் மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார்.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யயப்பட்டது. பின்னர் சாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிைய தரிசனம் செய்தனர்.
இதேபோல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை பெருமாள் கோவில், பருவாச்சியில் மலையின் மீது உள்ள கரிய வரதராஜ் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி வீரநாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஏமகண்டனூர் ஆட்சி அம்மன் கோவிலில் உள்ள பெருமாள் கோவிலிலும், காங்கேயம் சாலையில் உள்ள கிருஷ்ணா நகர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதேபோல் மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோவில், சென்னிமலை அருகே உப்பிலிபாளையத்தில் உள்ள அணிரங்க பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரை அடுத்த வடக்கு புதுப்பாளையம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னிதியில் சிறப்பு பூைஜ நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல் இச்சிப்பாளையம் கோனப்பெருமாள் கோவில், கிழக்காலூர் பெருமாள் கோவில், கொளாநல்லியில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கொந்தளம் வரதராஜ பெருமாள் கோவில், ஊஞ்சலூரை அடுத்த பனப்பாளையம் ஸ்ரீராமர் சன்னிதி, கொளத்துப்பாளையம் ஸ்ரீ சீதாராமர் கோவில், வடக்கு காளிபாளையம் ஸ்ரீ சீதாராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.