அனுமன் ஜெயந்தியையொட்டி: பஞ்சவடியில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி கோவிலில் வலம்புரி வினாயகர், ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடியில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
சென்னை,
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி கோவிலில் வலம்புரி வினாயகர், பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடியில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இங்கு அனுமன் ஜெயந்தி விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 11-ந் தேதி காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு யாகசாலையில் 7-ம் கால வேள்வி நடத்தப்படுகிறது. காலை 8.30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் 36 அடி ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.
அபிஷேகத்தை தொடர்ந்து 130 கிலோ எடையில் ஏலக்காய் மாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடக்கிறது. தெய்வீக இன்னிசைக் கச்சேரியும், சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சீதா கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது என்று பஞ்சவடி ஜெயமாருதி சேவா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.