பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் தயாரிப்பு பணி மும்முரம்


பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் தயாரிப்பு பணி மும்முரம்
x

திருக்கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரம், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய தேர் கட்டப்படுகிறது.

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் உற்சவமாக விமரிசையாக நடைபெறும். ஆனால், கோவிலுக்கு தேர் இல்லாததால் அந்த உற்சவத்தின்போது கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். புதிய தேர் வடிவமைக்க பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேர் செய்ய ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணி தொடங்கப்பட்டது. திருக்கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரமும், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய தேர் கட்டப்படுகிறது.

இந்த தேரின் எடை சுமார் 52 டன் ஆகும். 17 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 22 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த தேர் கட்டுமான பணியை செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த ஸ்தபதி திருமுருகன் குழுவினர் செய்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் சக்கரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மும்முரமாக நடந்து வருவதால் பணிகள் முடிக்கப்பட்டு வைகாசி விசாகத்திற்கு தேரோட்டத்திற்கு தயாராகிவிடும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story