நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆனிமாதம் நடைபெறும் பெருந்திருவிழா புகழ் பெற்றதாகும். அத்தகைய ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலா வந்தார். மாலை 5 மணிக்கு சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கங்காளநாதருக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேர் கடாட்சம் உலாவும், ரதவீதிஉலாவும் சென்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் திரண்டுள்ளனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ரதவீதிகள் மற்றும் டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சிறு வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.
தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 1,500 போலீசார், ஊர்க்காவல் படையினர் நேற்று இரவே பாதுகாப்பு பணியை தொடங்கினார்கள். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை கமிஷனர்கள் ஆதர்ஷ் பச்சேரா, கீதா ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ரதவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதன் மீது தொலைநோக்கி மூலம் போலீசார் கண்காணிப்பை தொடங்கி உள்ளனர். ரதவீதிகள், கோவில் உள்ளேயும், வெளிப்பகுதியிலும் மொத்தம் 147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக பார்த்து கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையத்தில் அகன்ற திரை அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர் செல்லும் போது தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் நாலாபுறமும் காட்சிகளை பதிவு செய்யும் உயர்ரக கேமராக்களை கொண்ட வாகனமும் உடன் செல்கிறது. இதுதவிர மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தற்காலிக கழிப்பறை வாகனமும் நிறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ உதவி, சிகிச்சைக்கும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தேரோட்டத்தையொட்டி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.