அந்தியூர் அருகேமகா சக்தி கோவில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
அந்தியூர் அருகே உள்ள மகா சக்தி கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள மகா சக்தி கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மகா சக்தி கோவில்
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் ஆதிரெட்டியூர் சித்தர் காட்டில் மகா சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை நாள் அன்று குண்டம் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
குண்டம் விழா
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மகா சக்தி எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க சப்பரத்தை தோள் மீது பக்தர்கள் சுமந்தபடி கோவில் வளாகம் வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் குண்டம் இறங்க வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனின் வாக்கு கிடைத்தவுடன் முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கி தீ மிதித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிந்து குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர், தவுட்டுப்பாளையம் உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.