மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 10 மணிக்கு அன்னை மயில் வடிவில் சிவபூஜை செய்த காட்சி நடந்தது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று காலை 8.30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம், இரவு 9 மணிக்கு வெள்ளி சந்திர வட்டம், கிளி வாகனம், அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு அதிகாரநந்தி தரிசனம். எம்பிரான் திருஞான சம்பந்தர் பெருமான் ஞானப்பால் அருந்தும் ஐதீக விழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு சாமி தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 9 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
23-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் அபிஷேகம், அங்கம் பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு உலா வந்து திருக்காட்சி அளிக்கிறார்.
24-ந்தேதி மாலை பிச்சாடனார் விழா நடைபெறுகிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு அன்னை கற்பகாம்பாள் மயில் வடிவில் புன்னை வனநாதரை பூஜிக்கும் ஐதீக விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.