முக்தி அளிக்கும் முக்தியாஜல ஈஸ்வரர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் பிரம்மதேசம் அருகே உள்ளது பெருமுக்கல் என்ற கிராமம். இந்த கிராமத்தின் மலையின் உச்சியில் கிழக்கு முகம் நோக்கி வீற்றிருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு முக்தி அளித்து அருள்பாலித்து வருகிறார் முக்தியாஜல ஈஸ்வரர்.
தொன்மை சிறப்பு
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெருமுக்கல் மலையில் காணப்படும் கீறல் உருவங்கள் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளை சேர்ந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்றாலும் மலைக்குகையில் காணப்படும் வட்டெழுத்து கல்வெட்டுகள் 6 மற்றும் 7-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இக்கோவிலில் 60 வகையான கல்வெட்டு தொடர்கள் உள்ளன. இதன்மூலம் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் கோவிலுக்கு அளித்த கொடைகள் மற்றும் திருப்பணிகளை அறிய முடிகிறது.
இதில் மிகவும் பழமையானதாக விளங்குவது விக்கிரமச்சோழன் கல்வெட்டாகும். இவரது காலத்தில்தான் மலை மீதுள்ள திருவான் மிகை ஈசுவரம் உடையார் கோவில் கற்கோவிலாக எழுப்பப்பட்டது. இதற்கு சான்றாக கருவறையின் தென் சுவரில் உள்ள விக்கிரமச்சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு விளங்குகிறது. தற்போது காணப்படும் கோவிலை செங்கல் ஆலயமாக எழுப்பியதும் முதலாம் குலோத்துங்கச்சோழன் என கூறப்படுகிறது.
ஆலய அமைப்பு
முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 650 படிக்கட்டுகள் உள்ளன. இவற்றை கடந்துதான் மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியும். அதே போல் கோவிலின் பின்பகுதியிலும் படிக்கட்டுகள் உள் ளன. அதாவது முன்பகுதி வழியாக சென்று சாமியை தரிசனம் செய்து விட்டு பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே செல்ல வேண்டும் என்ற ஐதீகம் முன்பு இருந்தது. ஆனால் தற்போது பின்பக்க படிக்கட்டுகளை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. கோவிலின் முன்பு ராஜகோபுரம் எதுவும் இல்லை. கோவிலை சுற்றி கோட்டை மதில் சுவர் உள்ளது. அதில் உள்ள வாசல் வழியாக உள்ளே சென்றால் 42 தூண்களுடன் கூடிய சுற்றுப்பிரகார மண்டபம் உள்ளது. இதற்கு அடுத்து கோவில் கருவறை உள்ளது.
கருவறையின் வெளிப்பகுதியில் இடதுபுறம் விநாயக பெருமான் காட்சி தருகின்றார். அவரை ஒட்டியுள்ள சுவாமியின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. அங்கே லிங்க வடிவில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவருக்கு எதிரே நந்தி பகவான் சிலையும் உள்ளது.
கருவறையின் சுற்றுச்சுவரில் காணப்படும் ஒரே தெய்வமாக தென்திசையில் தட்சிணாமூர்த்தி திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உருவம் அன்றைய சிற்ப கலைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இவருக்கு அருகில் சனகாதி முனிவர் இருவரது உருவங்கள் உள்ளன. ஒன்று முதுமை கோலத்திலும், மற்றொன்று இளமைக் கோலத்திலும் காணப்படுகிறது. சாமி சன்னதியில் இருந்து 10 அடி தொலைவில் சிறிய மண்டபம் உள்ளது. இங்கு சுமார் 1½ அடி உயர சிலையாக நின்ற கோலத்தில் ஞானாம்பிகை அம்மனும், கோவிலின் பின்பகுதியில் தனி சன்னிதியில் அனுமனும் புடைப்பு சிற்பமாக அருள்பாலிக்கின்றனர்.
சீதைக்குகை
இதற்கு அடுத்து அமைந்துள்ள திருக்குளத்தின் அருகில் குன்றுகளால் உருவான குகை ஒன்று உள்ளது. இந்த குகை சீதைக்குகை என்று வணங்கப்படுகிறது. இங்குதான் ராமனின் மகன்களான லவன், குசன் பிறந்ததாக நம்பப்படுகிறது. (லவன், குசன் பிறந்த இடம் மராட்டிய மாநிலம் கான்பூருக்கு அருகே என்றும் கூறப்படுகிறது).வால்மீகி மகரிஷி இம்மலையில் ஈசனை நினைத்து நீண்டகாலம் தவம் இருந்து அவரது பேரருளை பெற்றுள்ளார். அவர் தவம் இருந்த இடம் வால்மீகி குகை என்று வணங்கப்படுகிறது. மேலும் மலையின் மீது கோடைக்காலங்களிலும் வற்றாத 2 அழகிய சுனைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது.
தினமும் 2 கால பூஜையும், பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி, பவுர்ணமி ஆகிய காலங்களில் 4 கால பூஜையும் நடைபெற்று வரும் இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு வைகாசி மாதம் திருக்கல்யாண உற்சவம், மாசிமக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. தவிர ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை போன்று கிரிவல வழிபாடு மற்றும் கார்த்திகை தீப திருநாள் அன்று 1008 லிட்டர் நெய்யால் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருகிறது. .
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், மரக்காணத்தில் இருந்து 22 கிலோ மீட்டா் தொலைவிலும், புதுச்சோியில் இருந்து 57கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
காஞ்சி மகானை அடையாளம் காட்டிய திருத்தலம்
இக்கோவிலுக்கு கூடுதல் சிறப்பாக கடந்த 1906-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 66-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீசந்திரசேகரர், பெருமுக்கல் மலையில் உள்ள முக்தியாஜல ஈஸ்வரர் சன்னிதியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்தார். அப்போது தனது தந்தையுடன் காஞ்சி மடாதிபதியை தரிசனம் செய்வதற்காக சாமிநாதன் என்ற சிறுவனும் வந்தான். அவனது பக்தியையும், ஞானத்தையும் கண்டு வியந்த பீடாதிபதி, சிறிது காலத்துக்கு பின்னர் அவரை காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக நியமித்தார். அந்த சாமிநாதனே கலியுகத்தில் சிவ ஸ்வரூபமாக நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆவார். தன்னுடைய தவ வலிமையால் இப்பூவுலகுக்கே குருவாக திகழ்ந்த காஞ்சி மகானை அடையாளம் காட்டுவதற்கு காரணமாக அமைந்த புண்ணியபூமி பெருமுக்கல் திருத்தலம் ஆகும். மேலும் மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர் பாலயோகி சுவாமிகளும் இந்த மலையில் தங்கி தவம் இயற்றி ஈசனின் அருளை பெற்றுள்ளார்.
தாழக்கோவில்
பெருமுக்கல் மலையில் சாமி சன்னிதிக்கு செல்லும் முன்பக்க படிக்கட்டுகளுக்கு எதிரே தாழக்கோவில் என்று அழைக்கப்படும் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இங்கு அம்மன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று, வெளிமண்டபம் ஆகியவை உள்ளன. மேலும் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் சுயம்புலிங்கம், ஆயக்கலைகள் சம்பந்தமான சிற்பங்களும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
ராமாயண சாட்சிகள்
இந்த கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிறுடன் அரக்கி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் உருவம் ஒன்று குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண் பூதகணம் தழுவக்காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.