திருமண தடை நீங்க சுயம்வர பார்வதி யாகம்..! சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம்..!
சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற சுயம்வர பார்வதி யாகத்தில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கெம்பநாயக்கன்பாளையம். இங்கு டேம் ரோட்டில் கொருமடுவு என்ற இடத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வருடம்தோறும் திருமண தடை நீக்கும் பார்வதி யாகம் நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடமாக நடைபெறவில்லை.
இந்த வருடம் வழக்கம்போல கோயிலின் முன்பாக பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது. அந்தப் பந்தலில் ஆயிரக்கணக்கான இளம் பெண்களும் வாலிபர்களும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை 26-வது ஆண்டு விழாவும் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடைபெற்றது.
இன்று காலை விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது. தீக்குண்டம் வளர்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதினார்கள். நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மற்றும் முன்னோர் சாபம் உட்பட அனைத்து தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க ஈரோடு, கோவை திருப்பூர், சேலம் மற்றும் தமிழ்நாடு அளவிலும், வெளி மாநிலத்தில் இருந்து ஆண்களும் பெண்களுமாக சுமார் 2000 பேர் இதில் கலந்து கொண்டார்கள்.