அன்பே பிரதானம்


அன்பே பிரதானம்
x

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் பிரவாகத்தில் நாம் மூழ்கி பிறருக்கு அந்த அன்பின் ஆழத்தை அறியச் செய்வோம்.

வாக்குவாதங்களும், பிரிவினைகளும் இக்காலத்தில் மனிதர்களிடையே காணப்படுவதற்கு அன்பு தாழ்ச்சியே காரணம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், பிரியமாகவும் இருந்தால் பிரிவினைக்கு இடமில்லை. அன்பு இருக்கும் இடத்தில் பொறாமை, வீண் வார்த்தை, இறுமாப்பு போன்றவை இருக்காது.

சூழ்நிலைக்கேற்றவாறு மனிதர்களின் அன்பு மாறலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்போ என்றும் மாறாதது. அந்த அன்பினாலேயே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு சிலுவையில் ரத்தம் சிந்தினார். அன்பு விசுவாசத்தை தூண்டக்கூடியதாகவும், மனித குலத்தை வழிநடத்தும் விளக்காகவும் இருக்கிறது. 'விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற மூன்றிலும் அன்பே பெரியது' என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார் (1 கொரி13:13).

'நான் உங்களில் அன்பாயிருந்தது போல் நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்' (யோவான் 13:34) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் அன்னையாக தெரசா அம்மையார் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவரது அளவற்ற கருணை, எல்லையில்லா அன்பு, ஆதரவற்றவர்கள் அனைவரையும் நேசித்த மனப்பாங்கு ஆகியவைகளே. ஆண்டவரின் அன்பை ஏழைகளிடமும், தொழுநோயாளிகளிடமும் காட்டி அவர்களுக்கு செய்த சேவையை இன்றும் உலகமே போற்றுகிறது.

பிறரைப் பற்றி மிகவும் கடுமையான குறைகள் கூறுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் இந்நாட்களில் அன்பு நம்மிலிருந்து தான் ஆரம்பமாக வேண்டும். ஒரு தகப்பன் தன் மகனிடம் சில துண்டுக் காகிதங்களை கொடுத்து அதிலிருக்கும் படத்தை உருவாக்கக் கூறினார். புத்திசாலியான மகன் சிறிது நேரத்துக்குள்ளாகவே படத்தை சேர்த்து தகப்பனிடம் காண்பித்தான். தகப்பனார் ஆச்சரியப்பட்டு மகனிடம் கேட்க, அவன் ''அப்பா நீங்கள் கொடுத்த படத்துண்டுகள் பின்னால் ஒரு மனிதனின் உருவம் இருந்தது. அதை ஒன்றாக்கி சரி செய்தேன். முன்னாலுள்ள படம் சரியாகிவிட்டது என்றான். ஆம் மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் சேர்ந்து அன்பு காட்டுவதில் சிறந்து விளங்கினால் பிரிவினைகள், கலவரங்கள், கலகங்கள், சண்டைகள், யுத்தங்கள் போன்றவற்றுக்கு இந்த உலகில் இடமே இல்லாமல் போய்விடும்.

வேதத்தில் தாவீதும், யோனத்தானும் மிகவும் அன்பு கொண்ட நண்பர்களாக இருந்தனர். யோனத்தான் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து துக்கமடைந்த தாவீது ராஜா அவனது ஊனமுற்ற மகனான மேவிபோசேத்தை நேசித்து தன் குமாரனை போலவே நடத்தினான்.

ஊனமுற்றோரிடம் நாம் அன்போடு இருக்கிறோமா?அல்லது அவர்களை உதாசீனம் செய்கிறோமா? என்பதை யோசித்துப் பார்ப்போம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளிடமும், ஊனமுற்றோரிடமும் மிகுந்த கரிசனை கொண்டவராயிருந்தார். அன்பினால் பார்வையற்றவர்களுக்குக் கண்ணொளி கொடுத்தார். காது கேளாதோர் செவித்திறன் பெற்றனர். நடக்க முடியாதவர்களை நடக்க செய்தார் (மத்:11:5). பசியால் வாடிய மக்களுக்கு உணவளித்தார்.

தேவன் அன்பாக இருப்பது போல நாமும் சக மனிதர்களிடமும் அன்பாயிருப்போம். கண் முன்னால் இருக்கும் மனிதரை நேசிக்க முடியவில்லை என்றால் நம் கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் எப்படி அன்பு ெசலுத்த முடியும்?

நாம் எவ்வளவு காணிக்கை கொடுக்கிறோம் அல்லது எவ்வளவு தான தருமம் செய்கிறோம் என்பதை விடவும் மேலானது ஒன்று இருக்கிறது என்றால், மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதே. உலகில் ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அன்பு மொழியே சிறந்த மொழி. சூரியனின் பார்வையால், உலகம் ஒளி பெறுவது போல, நம் அன்பு பார்வையால் பிறர் உள்ளத்தில் ஒளி வீசட்டுமே.

"தம்முடைய ஒரே பேரான குமாரனாலே நாம் பிழைக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதால் தேவன் நம் மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது" (1 யோவான் 4:9).

சிலுவையில் தொங்கிய நேரத்திலும் இயேசு கிறிஸ்து தன் பகைவர்களை நேசித்தார். அப்பொழுதும் இயேசு, "பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்றார் (லூக்கா23:34).

தன் தாயின் மீதிருந்த அன்பால் அவரை தன் சீடனிடன் ஒப்டைத்து தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்தார்.

சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் பிரவாகத்தில் நாம் மூழ்கி பிறருக்கு அந்த அன்பின் ஆழத்தை அறியச் செய்வோம். சிலுவை அன்புக்கு சிரம் தாழ்த்துவோம்.


Next Story