துளசி இலையால் காப்பாற்றப்பட்ட உயிர்


துளசி இலையால் காப்பாற்றப்பட்ட உயிர்
x

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆழ்ந்த பக்தியை மட்டும்தான். சிறிய துளசி இலையைக் கொடுத்தாலும், அதை இறைவன் பரவசத்துடன் ஏற்றுக்கொள்வார்.

ஏழை விவசாயி ஒருவரிடம் சிறிய நிலம் இருந்தது. அதில் அவர் கீரை பயிரிட்டிருந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, நிலத்திற்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து கட்டிக்கொண்டு, அதை சந்தையில் விற்று வருவார். அதன் சொற்ப வருமானத்தில்தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். விவசாயி தினமும் தன்னுடைய நிலத்திற்குச் செல்லும் வழியில் ஒரு முனிவர் குடில் அமைத்துத் தங்கியிருந்தார். அந்த முனிவர், அதிகாலை நேரத்திலேயே துளசியால் பெருமாள் விக்கிரகத்திற்கு பூஜை செய்வதை, விவசாயி அனுதினமும் பார்த்துச் செல்வார்.

ஒரு நாள் தன்னுடைய நிலத்திற்குச் சென்ற விவசாயி, கீரைகளை பறித்துக் கொண்டிருந்தபோது, அங்கே ஒரு துளசிச் செடியும் வளர்ந்திருந்தது. அதில் இருந்து துளசி இலைகளைப் பறித்த விவசாயி, நம்மால்தான் தினமும் இறைவனை வணங்க முடியவில்லை. தினமும் வழிபாடு செய்யும் முனிவரிடமாவது இந்த துளசி இலைகளை வழங்கலாம் என்று கருதி, அதை எடுத்து தனியாக வைத்தார். கீரைகளை கட்டுகளாக கட்டியபிறகு, கூடையில் வைத்தவர், அதன் உள்ளேயே துளசி இலைகளையும் வைத்தார். ஆனால் அவர் கட்டி வைத்த கீரைகளுக்கு உள்ளே ஒரு சிறிய கருநாகம் புகுந்து அமர்ந்ததை அவர் கவனிக்கவில்லை.

கீரைகள் இருந்த கூடையை தலையில் சுமந்தபடி, முனிவரின் குடிலுக்கு வந்தார், விவசாயி. தன் குடிலுக்குள் நுழைந்த விவசாயியை வாஞ்சையோடு ஏறிட்டுப் பார்த்தார் முனிவர். அதே நேரம் விவசாயியின் பின்புறம் ஒரு நிழலாடுவதையும் முனிவர் கவனித்தார். அது யார் என்று அவர் பார்த்தபோது, அங்கு ராகு பகவான் நின்றிருந்தார். நடப்பது என்ன என்பதை ஒருவாறாக கணித்து விட்ட முனிவர், விவசாயியிடம் "அப்பனே.. நான் சொல்லும் வரையில் உன் தலையில் உள்ள கூடையை கீழே இறக்க வேண்டாம். நான் இப்போது வந்து விடுகிறேன்" என்று கூறியபடி எழுந்தவர், விவசாயியின் கண் களுக்குத் தென்படாத ராகுவை, தன்னுடன் வரும்படி அழைத்தார்.

பக்கத்து அறைக்குள் சென்ற முனிவரைப் பின் தொடர்ந்து ராகுவும் அந்த அறைக்குள் நுழைந்தார். அப்போது ராகுவிடம், "ராகுவே.. நீ எதற்காக அந்த ஏழை விவசாயியை பின்தொடர்கிறாய்? அதற்கான காரணத்தை நான் அறியலாமா?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகு, "முனிவரே.. இந்த விவசாயியை, நான் கரு நாக வடிவெடுத்து தீண்ட வேண்டும் என்பது விதி. அதற்கான நாள் இன்றுதான். ஆனால் என்றும் இல்லாத அதிசயமாக, அந்த விவசாயி இன்று இறைவனின் பிரியமான துளசியையும் தன்னுடைய கூடையில் வைத்து சுமந்தபடி உங்கள் இருப்பிடம் வந்து விட்டார். துளசி அவரது தலையில் இருந்த காரணத்தால் என்னால் அவரை தீண்ட முடியவில்லை. அதனால்தான் பின்தொடர்ந்தேன். உங்களிடம் அந்த துளசியை ஒப்படைக்கவே அவர் வந்துள்ளார். அதை உங்களிடம் கொடுத்ததும் என்னுடைய வேலையை முடித்துக் கொண்டு நான் திரும்பிவிடுவேன்" என்றார்.

ஏழையின் மீது முனிவருக்கு இரக்கம் உண்டானது. "ராகுவே.. நீ அந்த விவசாயியை தீண்டாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

"நீங்கள் இதுவரை இறைவனுக்கு செய்த பூஜையின் பலன்களை, அந்த விவசாயிக்கு தந்தால் அவரை பீடித்த தோஷம் விலகிவிடும். நானும் இங்கிருந்து சென்றுவிடுவேன்" என்று ராகு கூறினார்.

மகிழ்ந்து போன முனிவர், "நான் இதுவரை பெருமாளை பூஜித்த புண்ணியம் என்று இருந்தால் அது அனைத்தையும் அந்த ஏழை விவசாயிக்கு தாரை வார்த்து தருகிறேன்" என்றார்.

மறு கணமே, ராகுவின் உருவம் அங்கிருந்து மறைந்தது. இப்போது விவசாயியிடம் வந்த முனிவர், "அப்பனே.. நீ கொண்டு வந்த துளசி இலையை என்னிடம் கொடு. இனி தினமும் இதுபோல் துளசி இலைகளைக் கொண்டு வந்து தருகிறாயா?" என்று கேட்டார்.

இறை பூைஜ செய்ய முடியாவிட்டாலும், அந்த பூஜைக்காக துளசி இலைகளையாக தரலாம் என்பதால், அகமகிழ்ந்து ஒப்புக்கொண்டார் விவசாயி. அன்று முதல் தன்னுடைய நிலத்தில் கீரைகளுக்கு மத்தியில் துளசியையும் பயிரிட்டு வளர்த்து, முனிவருக்கு கொடுத்தார்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆழ்ந்த பக்தியை மட்டும்தான். சிறிய துளசி இலையைக் கொடுத்தாலும், அதை இறைவன் பரவசத்துடன் ஏற்றுக்கொள்வார். அதற்காக அவர் நமக்கு அளிக்கும் பரிசு, நாம் வாழ்க்கையை அர்த்தமாக்குவதாக அமையலாம்.


Next Story