உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்....
தேவையான, நலமான விஷயங்களை மட்டும் பேசுவோம், நன்மைகள் பெறுவோம், உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்.
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்". (நீதிமொழிகள் 18:21)
அன்பானவர்களே, நம் ஒவ்வொருவருடைய நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு வல்லமை உண்டு. இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.அதனால் தான் நமது நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நன்மை நிறைந்ததாக, ஆசிர்வாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று முன்னோர்களும், பெரியோர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
நாம் அனுதினமும் நாவினால் 'என்னுடைய வாழ்க்கையில் நான் நிச்சயமாக நன்றாக இருப்பேன், சுகமாக இருப்பேன், வாழ்வில் உயர்வுகள் வரும்' என்று பேசி, அதற்கான முயற்சிகள் செய்யும் போது நாம் விரும்பியவை நிச்சயமாக நம்மைத் தேடி வரும்.அதை விட்டு மாறாக நாவினால் ஒருவருக்கு முன்பாக முகஸ்துதியுடன் பேசுவது, அவர் அந்த இடத்திலிருந்து சென்ற உடன் அவர்களைப் பற்றி குறை கூறுவது, இல்லாத, பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.
புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது: "கப்பல்களைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரியவைகளாயிருந்தும், கடுங்காற்றுகளால், புயல்களால், அலைகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன், போகும் படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகச் சிறிய சுக்கானாலே திருப்பப்படும்".
ஒரு சிறிய நெருப்பு பொறி எவ்வளவு பெரிய காட்டையும் கொளுத்தி விடுவதுபோல சிறிய உறுப்பான நாக்கில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நல்ல, கெட்ட செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
உருவத்தில் பெரிய யானை, காட்டுக்கு ராஜாவான சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்களை மனிதன் தன் திறமையால் அடக்கி ஆள்கின்றான். ஆனால் அவனால் தன் நாக்கை அடக்க முடியவில்லை. அதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மரணத்தை தரும் விஷத்தை போன்று உள்ளது.
ஒரே நாவினாலே பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், அதே நாவினாலே தேவனுடைய சாயலின் படி உண்டாக்கப்பட்ட மனுசனை சபிக்கிறோம். ஒரு நபரை நேரில் பார்க்கும் போது இனிக்க இனிக்க பேசுகிறோம், அவர் அவ்விடத்தில் இருந்து சென்றவுடன், அவரைப் பற்றி தவறாக, கேவலமாக, பொய்யாக, கெட்ட வார்த்தைகளுடன் பேசுகிறோம். வீண் பேச்சுக்கள், கட்டுக்கதைகளை நமக்கேற்றவாறு புனைந்து உண்மை போல மற்றவர்களை நம்ப வைத்து பேசுகிறோம்.
ஒரே நீரூற்றிலிருந்து, இனிப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா யோசித்துப் பார்ப்போம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவனின் கணக்கில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
வேதம் சொல்கிறது: 'சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் இறைவனுடைய கட்டளைகளை, போதனைகளை குற்றப்படுத்துகிறவனாக இருப்பான். மற்றவர்களைக் குறை சொல்லி குற்றப்படுத்துவதற்கு நாம் யார்?. யோசித்துப் பாருங்கள், அன்பானவர்களே.
'இன்னும் கோள் சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனால் அவைகள் மற்றவர்கள் மனதை முள் போல குத்தும். மூடருடைய வார்த்தைகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அவனுக்கு அடிகளை வரவழைக்கும். அவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே அவனுக்கு கேடாக அமைந்து விடும்'.
'ஒருவனுடைய வாயின் இனிய வார்த்தைகளால் அவனுடைய வயிறு நிரம்பி, அவன் வாழ்வில் திருப்தி அடைவான். இனிய வாய்மொழிகள் ஆழமான நீரூற்றுப் போலிருக்கும், அதிலிருந்து ஆசீர்வாதமான வற்றாத ஜீவ நதி புரண்டோடும். இனிய சொற்கள் தேன்கூடு போல ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு அரு மருந்தாகவும் அமையும்'.
ஆம் பிரியமானவர்களே, நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அருமருந்தாக அமைய வேண்டும். நம் வாயின் வார்த்தைகள் எதிர்மறையான காரியங்களை பேசாமல், நேர்மறையான காரியங்களை மட்டுமே பேச வேண்டும். நம் வாயின் வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. நன்றாயிருப்போம், வாழ்ந்து சுகமாயிருப்போம். சிறப்பான, வளமான எதிர்காலம் நமக்கு உண்டு என்று அனுதினமும் அதைப் பற்றி பேசி, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தால், நிச்சயமாக காரியங்கள் கைகூடும்.
ஆகவே நம் வாயின் வார்த்தைகளால் நம்மையும், நாம் சந்திக்கும் அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தி, அன்பு செலுத்தினால் நிச்சயமாக நன்மைகள் நம்மைத் தேடி வரும், இறைவனின் ஆசிர்வாதங்களும் நதி போல நம்மைச் சுற்றி வரும். அது ஒரு வற்றாத ஜீவ நதி, அது பாயும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்கி,அனேகருக்கு ஆசிர்வாதமாக விளங்கும்,
அது போல நம் நாவின் வார்த்தைகள் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாக, செழிப்பாக விளங்க, நம்மை மாற்றுவோம், மாறுவோம். ஆமேன்.
"சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான், பேசாதிருந்தால் மூடனும் ஞானியெனப்படுவான், நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று".
அன்பானவர்களே தேவையான, நலமான விஷயங்களை மட்டும் பேசுவோம், நன்மைகள் பெறுவோம், உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்.