மன கசப்பை மறந்து அன்பாய் வாழ்வோம்


மன கசப்பை மறந்து அன்பாய் வாழ்வோம்
x

மனக்கசப்பு ஆபத்தானது. நல்லதெனில் மனதில் எழுத வேண்டிய நாம், மறவாமல் தீமையான காரியங்களை கல்வெட்டாக பதித்து விட்டு, தினமும் அதை வளர்த்துக்கொண்டு இருப்பது இயல்பு.

"சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது" என்று வேதத்தில் படிக்கிறோம் (எபேசியர் 4:31).

யாக்கோபுக்கு பன்னிரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் கடைக்குட்டிக்கு முந்தைய பையன் யோசேப்பு. அப்பாவுக்கு செல்லப்பிள்ளை.

"சகோதரர்கள் தன்னை வணங்குவார்கள்" எனும் கனவைக் காண்கிறான் யோசேப்பு. இதைக்கேட்டு கோபமடைந்த சகோதரர்கள், ஒரு நாள் யோசேப்பை 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாய் விற்று விட்டார்கள்.

ஆனால், 'யோசேப்பு தலைவனாக வேண்டும்' என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. யோசேப்பு எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். எங்கு அடிமையாக வாழ்ந்தாரோ, எங்கு அவமானப்பட்டாரோ, எங்கு சிறையில் வாழ்ந்தாரோ, அந்த நாட்டுக்கே அதிகாரியானார்.

யோசேப்புக்கு மிக தீமையான கொடுமை செய்த சகோதரர்கள் மேல் அவருக்கு மனக்கசப்பு ஏற்படவில்லை. அவர்கள் உதவி நாடி வந்த போது, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பினார்.

தான் அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் யோசேப்பு தன் சகோதரர்களை தண்டித்திருக்கலாம். ஆனால் அவர், 'இறைவனின் பார்வைக்கு நல்லது' எனும் விஷயங்களை மட்டுமே செய்தார். ஒரு வேளை யோசேப்பு மனக்கசப்புடன் சகோதரர்களை தண்டித்திருந்தால், கடவுள் வைத்திருந்த உயரமான இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றிருக்க மாட்டார்.

மற்றவர்களின் நிராகரிப்பு மற்றும் அவமானங்களை பொறுமையோடு கையாள்பவருக்கு நல்லதை தருவதே இறை அன்பு.

இயேசுவானவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் எல்லோரையும் நேசித்தார், மனம் திரும்பியவர்களை மன்னித்தார். அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன். அப்படியிருந்தும் இயேசு கிறிஸ்துவை அவமானப்படுத்தியவர்கள் ஏராளம்.

சிலுவையில் அறையும் முன் ஏளனப்பேச்சுக்கள் அவருடைய உள்ளத்தை கிழித்திருக்கக் கூடும். கேலி குரல்கள் காதுகளை பிய்த்திருக்கக் கூடும். அவருடைய ஆடைகள் அவிழ்க்கப்பட்டன, அவமானம் அவருக்கு அளிக்கப்பட்டது.

உலகை தந்தவருக்கு அவமானங்கள் பரிசாக கொடுக்கப்பட்டன. தன் கொலைக்கருவியை தானே தூக்கி வரும் அவல நிலை அவருக்கு ஏற்பட்டது. இயேசுவைத் திருடனாய் சித்தரிக்க, அவர் சிலுவையின் இருபுறமும் கள்வர் இருவர் சிலுவைகளில் தொங்கினர்.

இயேசுவானவர் அந்த சூழ்நிலையிலும் கோபமோ மனக்கசப்போ அடையவில்லை. மாறாக வேதனையின் உச்சத்திலும் தன்னை சிலுவையில் அறைந்தவர்களின் மன்னிப்புக்காய் மன்றாடினார். எல்லோரிடமும் அன்பாக பழகினார்.

இயேசுவை பின்பற்றும் நாம் மனக்கசப்பை வேரோடு அழித்து, மற்றவர்கள் மேல் கரிசனை உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்பதே அவர் நமக்கு கற்பிக்கும் பாடம்.


Next Story