பாவத்தை விலக்குவோம், பரமனை நெருங்குவோம்


பாவத்தை விலக்குவோம், பரமனை நெருங்குவோம்
x

நமது துவக்கம் இயேசுவின் மரணத்தோடு துவங்க வேண்டும். பாவத்தை விலக்குவோம், பரமனை நெருங்குவோம்.

பூமியில் முதல் பாவம் எப்படி நுழைந்தது என்பதைப் பற்றி கிறிஸ்தவம் இப்படிச் சொல்கிறது. 'கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்து, அவர்களை ஏதேனிலுள்ள ஒரு தோட்டத்தில் குடியேற்றினார். ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக் கூடாது' என்றார்.

அலகை பாம்பு வடிவத்தில் வந்து ஏதேனில் மகிழ்ச்சியாய் இருந்த ஏவாளை தன் தந்திர வார்த்தைகளால் ஏமாற்றியது. அவள் அதை நம்பினாள். விலக்கப்பட்ட கனியைத் தின்றாள், ஆதாமுக்கும் கொடுத்தாள். பழுதற்ற முதல் தம்பதியினரை பாவம் பாதித்தது. அவர்கள் இறைவனின் தோட்டத்தை விட்டு, மனிதரின் நிலப்பரப்புக்கு தள்ளப்பட்டார்கள்.

சரி, அலகை ஏன் ஏவாளை ஏமாற்றியது?, அதனால் அதற்குக் கிடைக்கப் போகும் பயன் என்ன?. கடவுள் படைத்த முதல் மனிதனையே 'கண்ணி' வைத்து கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன?. கடவுள் சொன்னவையே பொய் என சொல்லி மனிதனை ஏன் பாவத்துக்குள் விழ வைக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடை தொடக்கநூலில், ஆதியாகமத்தில் இல்லை. அதை இறைவன் இணை திருமறைகள் நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

அலகை ஏவாளை ஏமாற்றியதன் காரணம், 'பொறாமை' என்கிறது சாலமோனின் ஞானம் நூல். 'அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்'. (சாலமோனின் ஞானம் 2: 24)

புதிய ஏற்பாட்டுக்கு முந்தைய நூல்களில் கடைசியாக எழுதப்பட்ட நூல் சாலமோனின் ஞானம் நூல் தான். இதை எழுதியவர் சாலமோன் மன்னர் அல்ல. சாலமோன் எனும் பெயருடைய ஒரு யூதர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் எழுதிய நூல் இது.

இறைவனோடு இணைந்து உன்னதத்தில் வாழ்ந்து வந்த தேவதூதர்களில் ஒரு பிரிவினர் 'கர்வத்தினால்' இறைவனை எதிர்த்தனர். இறைவனை விட மேலானவனாக தன்னைக் காட்டிக்கொள்ள நினைத்த லூசிபர் அந்தக் கூட்டத்தின் தலைவனானான். அவனையும், அவன் தூதர்களையும் கடவுள் விண்ணிலிருந்து பாதாளத்துக்குத் தள்ளிவிட்டார் என்கிறது ஏசாயா நூல்.

'நான் விண்ணுலகிற்கு ஏறிச்செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்; வடபுறத்து எல்லைப் பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள் மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய் என்கிறார். ஏசாயா 14:12

அப்படி வீழ்த்தப்பட்ட அலகை, வேறு யாரும் இறைவனோடு அத்தகைய ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கக் கூடாது என விரும்புகிறது. இறைவனோடு இணைந்திருப்பது எத்தனை இன்பமானது என்பதை அலகை அறியும். காரணம், ஒருகாலத்தில் அத்தகைய பரவச நிலையில் அது இருந்தது. இப்போது புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதால், பிறரும் அந்த மகிழ்வின் நிலைக்குள் சென்று விடக் கூடாது என்று தன் முழு சக்தியையும் பயன்படுத்தி தடுக்க முயல்கிறது.

கடவுளிடம் நம்மைப் பற்றி இடையறாது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவன் சாத்தான் தான். 'நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான்' (திருவெளிப்பாடு 12:10) என்கிறது இறைவார்த்தை.

நாம் பாவத்தில் விழும்போது சாத்தானின் கூட்டாளிகளாகிறோம். பாவத்தை விலக்கும் போது இறைவனின் பிள்ளைகள் ஆகிறோம். பாவத்தை விலக்க என்ன வழி?

சீராக் நூல் ஒரு எளிமையான அறிவுரையைத் தருகிறது.

'எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்' என்கிறது சீராக் 7:36.

'நீ பாவம் செய்யாமல் தப்பிக்க வேண்டுமெனில், எப்போதும் வாழ்வின் முடிவைக் குறித்த சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்' என்கிறது அந்த நூல்.

நரகமா, சொர்க்கமா? இறைவனோடான ஐக்கியமா, சாத்தானோடான சங்கமமா? எனும் கேள்வியை ஒவ்வொரு செயலிலும் கேட்டு, சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் நமது வாழ்க்கை பாவத்தைக் கடந்த வாழ்க்கையாய் மாறும்.

சீராக் நூல் இணை திருமறைகள் என இப்போது அழைக்கப்படுகிறது. துவக்க காலத்தில் திருப்பாடல்கள் நூலுக்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்பட்டு வந்த நூல் இது. இதை சபை நூல் என்றும் அழைப்பார்கள்.

சமீபத்தில் நடந்த கும்ரான் மலைப்பகுதி கண்டுபிடிப்புகளில் ஏசாயா நூலின் பழைய படிவங்களும், சீராக்கின் எபிரேய பதிவுகளும் கிடைத்திருக்கின்றன.

சீராக்கின் நூலின் ஆசிரியர் தருகின்ற இந்த அறிவுரை வெகு எதார்த்தமான அறிவுரையாய் நமக்கு முன்னால் நிற்கிறது. சாவு நெருங்கி வரும்போது தான் வாழ்வு உன்னதமாய்த் தோன்றும். சாவை நினைத்தால் தான் மறுவாழ்வு பற்றிய பயமும் வரும். அது தான் நமக்கு புனிதமாய் வாழவேண்டுமெனும் எச்சரிக்கை உணர்வையும் தரும்.

சிலுவையில் இறைமகன் இயேசு சாத்தானைத் தோற்கடித்தார். அவனது முடிவு இயேசுவின் பலியோடு ஊர்ஜிதமானது.

நமது துவக்கம் இயேசுவின் மரணத்தோடு துவங்க வேண்டும். பாவத்தை விலக்குவோம், பரமனை நெருங்குவோம்.


Next Story