இயேசுவின் அன்பை அனைவரிடமும் பிரதிபலிப்போம்...


இயேசுவின் அன்பை அனைவரிடமும் பிரதிபலிப்போம்...
x

இயேசுவின் குணாதிசயங்கள் என்றாலே அன்பு, மனதுருக்கம், கனிவு, இரக்கம், பிறருக்கு உதவி செய்தல், தன்னைப் போலவே பிறரையும் நேசித்தல், தவறுகளை மன்னித்தல் ஆகிய பண்புகளாகும்.

இறைவனின் நினைவில் நாம் திளைத்திருக்கும் போது நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் அநேகம் உண்டு. வல்லமை மிக்க தேவனான இயேசுபிரானின் நினைவில் மூழ்கி இருந்து, இறைச்சிந்தனையுடன் நாம் செயலாற்றும் போது நமது துன்பங்கள் நம்மை விட்டு விலகும். இறைவனின் கிருபையுடன் கூடிய வாழ்வு அமையும். இதையே விவிலியம், "ஒருவன் இயேசுவில் நிலைத்திருந்தால், அவன் அனேகருக்கு பிரயோஜனமாக மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" என்று கூறுகின்றது.

அன்பானவர்களே, ஒருவன் இயேசுவில் நிலைத்திருந்தால், எப்போதும் அவன் இயேசுவின் குணாதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இயேசுவின் குணாதிசயங்கள் என்றாலே அன்பு, மனதுருக்கம், கனிவு, இரக்கம், பிறருக்கு உதவி செய்தல், தன்னைப் போலவே பிறரையும் நேசித்தல், தவறுகளை மன்னித்தல் ஆகிய பண்புகளாகும்.

இதையே, இயேசு நீதிமான்களிடத்தில் மத்தேயு 25-ம் அதிகாரத்தில், "பசியாயிருந்தேன்-எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன்-என் தாகம் தீர்த்தீர்கள், அந்நியனாக இருந்தேன்-என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள், வஸ்திரம் இல்லாதிருந்தேன்-எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன்-என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலில் இருந்தேன்- என்னைப் பார்க்க வந்தீர்கள்'' என்று கூறுகிறார்.

அப்பொழுது நீதிமான்கள் அவரிடம் "ஆண்டவரே, நாங்கள் எப்போது உம்மை பசியுள்ளவராக கண்டு உமக்கு ஆகாரம் கொடுத்தோம். எப்போது உம்மை தாகமுள்ளவராக கண்டு உம்முடைய தாகத்தை தீர்த்தோம். எப்போது உம்மை அந்நியராக கண்டு உம்மைச் சேர்த்துக் கொண்டோம். எப்போது உம்மை வஸ்திரம் இல்லாதவராக கண்டு உமக்கு வஸ்திரம் கொடுத்தோம். எப்போது உம்மை வியாதி உள்ளவராக கண்டு பார்க்க வந்தோம். எப்போது உம்மை காவலில் இருக்கிறவராக கண்டு உம்மை பார்த்து ஆறுதலளித்தோம்" என்றார்கள்.

அதற்கு இயேசு, "மிகவும் அற்பமான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் என்ன உதவியைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். ஆம் பிரியமானவர்களே, 'உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக' என்ற ஒரே வார்த்தையில் தன் போதனையை நிறைவு செய்கிறார். ஆனால் இன்று நாம் திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், வீடு பிரதிஷ்டை, இறுதிச்சடங்குகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மட்டுமே இயேசுவை நினைவுகூருகின்றோம்.

இயேசு என்பவர் வானத்தில் வசிக்கும் ஒரு நபர் அல்ல, நம் ஆன்மாவில், இதயத்தில் நம்மோடு இருக்கிறவர். நம்மைப் படைத்து நம் இதயத்திற்கு துடிப்பை கொடுத்து, நாம் நிற்கும் போது, நடக்கும் போது, தூங்கும்போது கூட நம் உடல் உறுப்புகளை கட்டுப்படுத்தி இயக்குகிற மிகப்பெரிய ஆற்றல் ெகாண்டவர். நாம் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

'என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்ய இயலாது' என்று வேதாகமத்தில் கூறியுள்ளார். நம் கைகளை நாம் தூக்க வேண்டுமென்றாலும் நமக்குள் இருக்கிற அவர் ஆற்றலே நம்மை இயக்குகிறது. 'கடவுளின் சாயலாக, இறைவனால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான்' என்று வேதாகமம் கூறுகிறது. நாம் ஒரு குழந்தை மீது அன்பு செலுத்தும் போது, கடவுளின் முடிவற்ற அன்பின் ஒரு பகுதியை பயன்படுத்துகிறோம். பிறரை மன்னிக்கும்போது கடவுளின் மன்னிப்பின் ஒரு பகுதியை நாம் பயன்படுத்துகிறோம். நாம் அமைதியை கடைபிடிக்கும் போது கடவுளின் எல்லையில்லா அமைதியின் ஒரு பக்கத்தை பயன்படுத்துகிறோம். இப்படி மனிதனுடைய ஆத்துமாவையும் கடவுளையும் பிரிக்க முடியாது. ஏனென்றால் அவரே அதை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் நாம் இதை உணர வேண்டும்.

கடவுள் எனக்குள் இருக்கிறார், அவர் எனக்கு அமைதியையும், அன்பையும், மன்னிப்பையும் அளவில்லாத அவருடைய சுபாவத்தையும் எனக்குள் வைத்திருக்கிறார். அவரோடு இணைந்து நான் செயல்படும் போது என்னிலிருந்து அன்பும், மகிழ்ச்சியும், மன்னிப்பும், இரக்கமும், அமைதியும் பாய்ந்து ஓடும். இது எவ்வளவு பெரிய ஆனந்தம். நமக்குள் இருக்கும் விலையில்லா கடவுளின் சக்தியை தட்டி எழுப்புங்கள். அவரை ஆளுகை செய்ய ஒப்புக்கொடுங்கள். அவருடைய அன்பு உங்களில் வந்தால் நீங்கள் உங்களை நேசிப்பது போல் பிறரையும் நேசித்து மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள்.

இதையே யோவான் 15-ம் அதிகாரத்தில் இயேசு, "நானே மெய்யானத் திராட்சைச்செடி. நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" என்று கூறியுள்ளார்.

அன்பானவர்களே வாருங்கள், நாம் இயேசுவில் அன்பு கூருவோம், உலக மக்கள் ஒவ்வொருவரையும் நம்மைப் போலவே நேசிப்போம், நம்மில் ஒருவர் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக குரல் கொடுப்போம், நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இயேசுவின் அன்பை உலக மக்கள் அனைவரிடமும் பிரதிபலிப்போம், ஆமென்.


Next Story