குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.3½ கோடி..!


தினத்தந்தி 18 Oct 2022 2:29 PM IST (Updated: 18 Oct 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா நிறைவடைந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணி 5 நாட்களாக நடைபெற்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். 12 நாட்கள் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது. 11-ம் திருநாள் அன்று ஏராளமான உண்டியல்கள் நிறைந்துவிட்டது. அதனால் அந்த உண்டியல்களை மூடி சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 69 உண்டியல்களை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அலுவலர்கள் மேற்பார்வையில் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரொக்கமாக ரூபாய் 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 இருந்தது. 5 நாள் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் கோவில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story