ஆர். டி.ஓ. தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தை


ஆர். டி.ஓ. தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தை
x

உடுமலை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆர். டி.ஓ. தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆர். டி.ஓ. தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவில் திருவிழா

உடுமலையை அடுத்த சுண்டக்காம்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர் இழுப்பது மற்றும் படம் பிடிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் இருதரப்பினரிடையே மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து நேற்று உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்த பேச்சுவார்த்தையில் உடுமலை தாசில்தார் கணேசன், திருப்பூர் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழி வேல் மற்றும் இருதரப்பைச்சேர்ந்த முக்கிய நபர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது அனைத்து சமூகத்தினரும் அமைதியான முறையில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு கிராமத்தில் அமைதி காக்க வேண்டும். திருவிழா தொடர்பான கம்பம் எடுத்தல் கிடா வெட்டுதல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களை மாலை 5 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் அனைத்து சமூகத்தினரும் கோவில் சார்பாக பொதுவான கமிட்டி ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த கமிட்டியினர் மூலம் திருவிழா நடத்தப்படுவதை முறையாக போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும், என்று ஆர்.டி.ஓ. அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.


Related Tags :
Next Story