சிவசக்தி ரூபத்தில் காட்சி தரும் மூகாம்பிகை


சிவசக்தி ரூபத்தில் காட்சி தரும் மூகாம்பிகை
x

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் பக்தர்களுக்கு அருள் தருகிறார் கொல்லூர் மூகாம்பிகை.

பெங்களூருவில் இருந்து 458 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த அம்பாள் கோவில்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில். இங்கு மூகாம்பிகை சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறார். மகிசாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த கோவில், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில் கொடசாத்திர மலை அடிவாரத்தில் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது. தாய் மூகாம்பிகை ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபினியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் ஜோதிர்லிங்கத்தில் ஒரு அதிசயம் இருப்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. லிங்கத்தின் மத்தியில் தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். அந்த கோடு பிரிப்பதில் லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவதோடு, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு வந்து செல்ல பக்தர்களுக்கு பஸ், ரெயில் வசதி உள்ளது. உடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படுகிறது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொள்ளலாம். இந்த கோவிலின் ஆண்டு தேரோட்டம் மார்ச் மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.


Next Story