காஞ்சி வரதராஜர் கோவில் சிறப்புகள்
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
காஞ்சி வரதராஜர் கோவில், புராணங்களில் 'ஸத்யவ்ருத ஷேத்திரம்' என்று அறியப்படுகிறது. இங்கு செய்யும் பாவ-புண்ணியங்களுக்கு, ஆயிரம் மடங்கு பலன் என்பதால், இந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. காஞ்சி மாநகரை, சோழர்களும் பல்லவர்களும் தங்களின் ஆட்சிக் காலத்தில் நான்காக பிரித்திருந்தனர். புத்த காஞ்சி, ஜைன காஞ்சி, சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்ற அந்த நான்கில், தற்போது இரண்டு காஞ்சிகள் இருக்கின்றன. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் இருக்கிறது.
பிரம்மதேவன் தன்னுடைய மனம் தூய்மை அடைவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அந்த இடம், ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் இடது பக்கத்தில் உள்ள திருக்குளத்துக் கரை மண்டபத்தில் இருக்கிறது. பிரம்மன் செய்த யாகத்திற்கு சரஸ்வதி வர மறுத்துவிட்டார். எனவே பிரம்மன் தன்னுடைய மனைவியரில் மற்றொருவரான காயத்ரியை கொண்டு யாகத்தைத் தொடங்கினார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, வேகவதி நதியாக உருக்கொண்டு யாகத்தை தடுக்க ஓடிவந்தார். அந்த நதியின் சீற்றத்தை, ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால், இங்குள்ள குளம் 'அனந்தசரஸ்' என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மன் செய்த யாகத்தின் முடிவில், யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர், 'தேவாதிராஜன்'. இவர்தான் இந்த ஆலயத்தின் உற்சவராக இருக்கிறார். இவரது முகத்தில் நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் காண முடியும். உற்சவருக்கு 'அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற பெரும் உண்டு. மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத சிறப்பு, இத்தல பெருமாளுக்கு உண்டு. இங்கு அவர் ராஜாதி ராஜனாக ஆட்சி செய்கிறார். எனவே தேசத்தை ஆளும் ஒரு மன்னனுக்கு உரிய அனைத்து சடங்குகளும் இவருக்கும் உண்டு. வரதராஜப் பெருமாளின் மீது அதிக பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயில் இருந்து மீட்டு, மோட்சம் அளித்த 'கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்வு இந்த ஆலயத்தில்தான் நடந்திருக்கிறது.
ஆலயங்கள் தோறும் 'பிரம்மோற்சவம்' என்ற 10 நாள் உற்சவம் நடைபெறுவதை அனைவரும் கவனித்திருப்போம். பிரம்மதேவன் ஒவ்வொரு ஆண்டும் பூலோகம் வந்து இறைவனை பூஜிக்கும் 10 நாட்களும், 'பிரம்மோற்சவமாக' கொண்டாடுவதை தொடங்கியது இந்த ஆலயத்தில்தான் என்கிறார்கள். இந்த பிரம்மோற்சவத்தின் பூஜை விதிகள் அனைத்தும், பிரம்மனால் வகுக்கப்பட்டவை. இதைப் பின்பற்றியே அனைத்து வைணவக் கோவில்களிலும் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.
கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷம், முதன் முதலில் தொடங்கியதும் இங்கேதான். 'காஞ்சி கருட சேவை' என்பது மிகவும் பிரசித்தமான வாக்கியம்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான பரமபதம் என்ற திருத்தலத்தை பூலோக பக்தர்கள் யாரும் தரிசிக்க முடியாது. ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை, வைகுண்டத்தில் இருக்கிறது. எனவேதான் வருடத்திற்கு ஒரு முறை, இங்குள்ள தேவாதிராஜன், பரமபதநாதனாக சேவை சாதிக்கிறார்.
ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் இது என்பதால், கண்நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் நோய் நீங்கும் என்கிறார்கள். பங்குனி மாதம் இந்த ஆலயத்தில் 'பல்லவ உற்சவம்' என்னும் 7 நாள் நிகழ்வு நடைபெறும். அப்போது சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையை இறைவனுக்கு பூசி, ஈரத்துணியை அணிவிப்பார்கள். பின்னர் இறைவனை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். கோடை வெப்பத்தின் தாக்கம் இறைவனுக்கு இருக்கக்கூடாது என்பதற்காக அவர் மீதுள்ள அன்பினால் இது செய்யப்படுகிறது.