உலகத்தைக் காத்தருளும் கானாத்தூர் ஜகன்னாதர்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கானாத்தூரில் ஜகன்னாதர் கோவில் அமைந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்னாதர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொள்வது வழக்கம். பூரியில் உள்ளதைப் போலவே ஒரு ஜகன்னாதர் கோவில் சென்னையில் அமைந்துள்ளது பலரும் அறியாத தகவல். கிழக்குக் கடற்கரைச் சாலையில் கானாத்தூரில் ஜகன்னாதர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மகா கும்பாபிஷேகம் 2001-ம் ஆண்டில் நடைபெற்றது. இத்தலம் 'தட்சிண ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
காஞ்சியில் இருந்து கிரானைட் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு ஒரிய பாணியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பூசாரிகள் இக்கோவிலில் ஒரிய பாணியில் பூஜைகளைச் செய்து வருகிறார்கள். இத்தலத்தின் முக்கிய திருவிழா ரத யாத்திரையாகும்.
கோவிலுக்குள் நுழைந்தால் முதலில் தென்படுவது மிக வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைந்துள்ள துவஜஸ்தம்பம். கிரானைட் கல்லால் ஆன இந்தத் தூணை ஒரு ஆமை தன் முதுகில் தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆமையின் மீது பாம்புகளின் சிற்பங்களும், மேற்புறத்தில் விநாயகர் அதற்கு மேல் ஆதிஷேசன் முதலான சிற்பங்களும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் மூலக்கோவில் அமைந்துள்ளது.
ஜகன்னாதர் கோவிலின் நுழைவு வாசலில் இருந்து கருவறை வரை 22 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருபத்தி இரண்டு படிகளைச் கடந்து சென்றால்தான் நாம் ஜகன்னாதரை தரிசிக்க முடியும். ஐம்புலன்களாக கண், காது, மூக்கு, தோல், நாக்கு மற்றும் ஐந்து பிராணன்களான ப்ராணா, அபானா, வியானா, உதானா, சமானா மற்றும் ஐம்புலன்களின் செயல்களான பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை, தொடுஉணர்வு, மேலும் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் புத்தி, அகங்காரம் ஆகிய 22 அம்சங்களையும் இந்த 22 படிகள் பிரதிபலிக்கின்றன. பூரி ஜகன்னாதர் கோவிலிலும் வெளியிலிருந்து கருவறையை அடைய 22 படிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலின் தரை தளத்தில் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஜகன்னாதர், சுபத்திரை, பலபத்திரர் மூலவர்கள் ஒடிசாவில் சிறந்த வேப்பமரத்தில் வடிவமைக்கப்பட்டு இத்தலத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறை கோட்டங்களில் வராகர், நரசிம்மர் மற்றும் திரிவிக்கிரமர் ஆகியோரின் சிற்பங்கள் காட்சி தருகின்றன.
ஒடிசாவில் பூரி ஜகன்னாதர் கோவிலில் 'நவ களேவரா' என்ற உற்சவம் நடைபெறும். வருடத்தில் இரண்டு ஆஷாட மாதங்கள் நிகழும் போது இந்த உற்சவம் நடைபெறும். இது எட்டு, பன்னிரண்டு அல்லது பத்தொன்பது வருடங்களுக்கு ஒரு முறை நிகழும். இந்த உற்சவத்தின் போது பழைய சிற்பங்கள் மாற்றப்பட்டு புதிதாக ஜகன்னாதர், சுபத்திரை, பலபத்திரர் சிற்பங்கள் புனிதமான வேப்பமரத்தினால் செய்யப்பட்டு கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும்.
கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காஞ்சி விநாயகரும், ஒடிசாவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட விநாயகரும் சேர்ந்து அருளுகிறார்கள்.
விநாயகர் சன்னிதியின் எதிர்திசையில் காசி விஸ்வநாதர் ஒரு தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். விநாயகர் சன்னிதியின் அருகில் தென்கிழக்கு திசையில் வாகனமண்டபத்தின் அருகில் வேப்பமரம், ஆலமரம், அரசமரம் ஆகிய மூன்று மரங்களும் பின்னிப்பிணைந்து ஒன்றாய் காட்சிதருவது கூடுதல் சிறப்பு. ஜகன்னாதரின் சம்பிரதாயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது வேப்பமரம்.
வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் ஒரு தனிச் சன்னிதியில் மா விமலா காட்சி தருகிறார். மற்றொரு தனிச் சன்னிதியில் மா லட்சுமி காட்சி தருகிறார். தொடர்ந்து நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் நவக்கிரக நாயகர்கள் தங்களுக்குரிய திசைகளில் அமைந்து காட்சி தந்து அருளுவார்கள். ஆனால் இத்தலத்தில் வித்தியாசமாக நவக்கிரக நாயகர்கள் ஒரே வரிசையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்கள்.
கானாத்தூர் ஜகந்நாதர் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபட்டிற்காகத் திறந்திருக்கும்.
சென்னையில் கோயம்பேடு, பிராட்வே, கிண்டி முதலான பகுதிகளிலிருந்து கானாத்தூருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தில் இருந்தும் மாநகரப் பேருந்து வாயிலாக கானாத்தூரை எளிதில் அடையலாம்.