அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா - 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்


அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா - 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா வருகிற 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மதுரை,

108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆடி திருவிழா அடுத்த மாதம் ஜூலை 13ம் தேதி சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17ம் தேதி புதன்கிழமை காலை 6.45 முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.

20ம் தேதி சனிக்கிழமை இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிதேரோட்டம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பௌர்ணமி அன்று மாலையில் திருக்கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து மீண்டும் கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். அதுபோலவே இந்த ஆண்டும் ஜூலை 21ம் தேதி ஆடி தேரோட்டம் திருநாளன்று மாலையில் பதினெட்டாம்படி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து சந்தனம் சாத்துதல் நடைபெற உள்ளது.

23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்கு ஆடி அமைவாசையையொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறும். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story