தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்
இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை,
சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.
பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.
இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய கண்கொள்ளா காட்சியை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்கி கள்ளழகரை தரிசித்தனர்.
வைகையில் இறங்கிய கள்ளழகர், தொடர்ந்து ராமராயர் மண்டபம் வந்தடைந்தார். இங்கு கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளிய பின்னர், 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் கள்ளழகர் தனது இருப்பிடத்தை அடைகிறார்.