வாழ்க்கையை வெற்றியாக்கும் பெரும்பேர்கண்டிகை தான்தோன்றீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, பெரும்பேர்கண்டிகை என்ற ஊர். இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடனாய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இத்தல மூலவரான சிவபெருமான், மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
கயிலையில் சிவ-பார்வதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்தும், தென்பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. இதனை சமன் செய்வதற்காக, தென்பகுதியை நோக்கிச் செல்லும்படி அகத்தியரிடம் கூறினார், சிவபெருமான். 'நான் வேண்டும் இடங்களில் எல்லாம் தங்களின் திருமணக் கோலத்தை காட்டியருள வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தென்பகுதி நோக்கிப் புறப்பட்டார், அகத்தியர்.
அதன் ஒரு பகுதியாக அவர் பெரும்பேர் கண்டிகை வந்தார். அங்கு தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சஞ்சீவிமலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடச் சென்றார். இதனை அறிந்த முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் தெற்கு முகமாக திரும்பி அகத்தியருக்கு காட்சியளித்தார். இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதி எதிரில் சக்திவேல் மற்றும் பிரம்மாவின் வாகனமான அன்னப் பறவை காணப்படுகிறது. கோவில் தல விருட்சமாக ருத்ராட்ச மரம் உள்ளது. எனவே அகத்தியர், இத்தல முருகனை வணங்கிவிட்டு, பெரும்பேர்கண்டிகை ஏரிக்கரையின் கீழ் உள்ள தான்தோன்றீஸ்வரரை வழிபட்டார். பின்னர் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள ஆத்திமரத்தின் அடியில் அமர்ந்து, சிவ-பார்வதி திருக்கல்யாணக் காட்சியைக் காண்பதற்காக தவம் இருந்தார்.
அந்த நேரத்தில் சிவபெருமான், திரிபுரத்தை எரிப்பதற்காக தேரில் சென்று கொண்டிருந்தார். விநாயகரை வழிபடாததால் அவரது தேர் அச்சு முறிந்து போனது. தேர் அச்சு முறிந்த இடமே தற்போது 'அச்சரப்பாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் விநாயகரை வழிபட்டு, சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பாக தேர் அச்சு முறிந்ததும், அந்தப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரைக் காண்பதற்காக, சிவபெருமானை பெரும்பேர்கண்டிகைக்கு அழைத்துச் சென்றார், பார்வதிதேவி. இதையறிந்த முருகப்பெருமானும், அகத்தியரும் சிவபெருமானையும் பார்வதியையும் வரவேற்பதற்காக வந்தனர். பின்னர் பெரும்பேர்கண்டிகையில் அகத்தியருக்கு, சிவனும் பார்வதியும் திருக்கல்யாண கோலத்தை காட்டியருளினர்.
தேர் அச்சு முறிந்ததும், சிவபெருமானை தடுத்தாட்கொண்டு பெரும்பேர்கண்டிகைக்கு அழைத்து வந்ததால், இத்தல அம்மன் 'தடுத்தாட்கொண்ட நாயகி' என்று அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் முடிந்ததும், சித்திரை மாத சுவாதி நட்சத்திரத்தில் அத்தல சிவபெருமானும், பார்வதியும், பெரும்பேர்கண்டிகையில் எழுந்தருளி அகத்தியருக்கு திருமணக் கோலத்தை காட்டி அருளும் வைபவம் வெகுச் சிறப்பாக நடந்தேறுகிறது.
இந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த 'கோமடி' (பசுவின் பால் மடி) சங்கு உள்ளது. இந்த சங்கினைக் கொண்டு சுயம்புவாக உள்ள மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மணல் லிங்கம் என்பதால் நிரந்தரமாக செப்புக் கவசம் பொருத்தப் பட்டிருப்பதாக கருதப்படுகிறது. சுவாமிக்கு, கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தேர்தல், தேர்வு, வாழ்க்கை போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் சண்டன், முண்டன் என்ற அசுரர்களை வதம் செய்த சாமுண்டீஸ்வரி அம்மன், ரணபத்ரகாளியாக கோவில் கொண்டிருக்கிறார். தவிர கனகதுர்க்கை அம்மன், மகா கணபதி, அன்னபூரணி, அகத்தியலிங்கம், அகத்திய முனிவர், காலபைரவர், நாகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னிதிகளும் இங்கு உள்ளன. இதில் கனகதுர்க்கை அம்மன் சிலை, பல்லவ மன்னர்கள் காலத்து சிற்பக் கலை அம்சத்துடன் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்த பல்லவர்கள், சோழர்கள் போன்ற ஆட்சியாளர்கள் இத்தல தான்தோன்றீஸ்வரரையும், கனகதுர்க்கை அம்மனையும் வழிபட்ட பிறகே போருக்கு சென்றதாகவும், அதனால் போரில் வெற்றியைக் குவித்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்ற தீயசக்திகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், இங்குள்ள ரணபத்ரகாளி அம்மன் சன்னிதியில், பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் தீவினைகள் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. கனக துர்க்கை அம்மனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறும். இத்தல இறைவனான தான்தோன்றீஸ்வரர், பக்தர்களின் சோதனைகளை நீக்கி, சகல வெற்றி களையும், நன்மைகளையும் அளிப்பதோடு, குடும்ப மேன்மையையும், வம்ச விருத்தியையும் தரும் சிறப்புமிக்கவராக திகழ்கிறார்.
இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கோவிலின் பரம்பரை தர்மகத்தா பகவத்சேவாமணி ஆர்.ரவிச்சந்திர சிவாச்சாரியார், ஆர்.சங்கர்சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு, கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக விநாயகர், தான்தோன்றீஸ்வரர், தடுத்தாட்கொண்டநாயகி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
இங்கு மலை மீதுள்ள முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 6 நாட்களுக்கு, கந்தசஷ்டி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா மலையடிவாரத்தில் நடைபெறும். மறுநாள் இரவு 7 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தேறும். நவம்பர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமி அன்று மாலை, தான்தோன்றீஸ்வரருக்கு கோமடி சங்கினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிேஷகம் நடைபெறும்.
ஆற்காடு எம்.ஆர்.முரளீதரன், அச்சரப்பாக்கம்.