இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி
உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன.அவற்றில் இஸ்லாமும் ஒன்று என்பதுதான் பொதுவான கருத்தாகும்.
மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை, அதாவது வணக்க வழிபாடுகளை பற்றி பேசக் கூடியதாக இருக்கும். இஸ்லாம் சக மனிதர்களுக்கிடையே உள்ள தொடர்பு பற்றியும் பேசுகிறது. ஒரு மனிதன் தனது இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை சரியாக நிறைவேற்றி விட்டால் அவன் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பது அல்ல.. சக மனிதர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களின் மன்னிப்பை பெறாமல் இறந்து விட்டால் அவன் எவ்வளவு பெரிய வணக்கசாலியாக, எவ்வளவு நன்மைகளை அடைந்திருந்தாலும் அவன் இறைவனிடம் நற்கூலி பெற முடியாது என்று வலியுறுத்துகிறது இஸ்லாம். எனவே தான் இஸ்லாம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கைநெறி எனப்படுகிறது.மரணத்திற்கு பின் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள். இறைவனின் சன்னிதியில் விசாரணைக்காக நிறுத்தப்படுவார்கள். அப்போது இறைவன் கேட்பான், "மனிதா நான் பசியோடு இருந்தேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை. நான் தாகத்தில் இருந்தேன், எனக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. நான் ஆடை தேவையுள்ளவனாக இருந்தேன், நீ எனக்கு ஆடை கொடுக்கவில்லை" என்பான். அப்போது மனிதனோ, "இறைவா நீ தானே எங்களுக்கு உணவு, நீர், உடையெல்லாம் வழங்கினாய். நீ எப்படி அவற்றின் தேவையுடையவனாய் இருந்திருக்க முடியும்?"."எனது இந்த அடியான் (உனது சக மனிதன்) பசியோடு இருந்தான், தாகித்திருந்தான், அவனுக்கு நீ உணவு அளித்து இருந்தால்,நீர் புகட்டி இருந்தால், ஆடை அளித்து இருந்தால் அங்கே நீ என்னை பார்த்து இருப்பாய்"என்று இறைவன் கூறுவான் என இறைவனே அறிவித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: ஹதீஸ் குத்ஸி)
மற்றொரு அறிவிப்பில் வருகிறது, ஒரு மனிதன் வணக்க வழிபாடுகள் மூலம் நிறைய நன்மைகள் செய்தவனாக இறைவனின் முன் வருவான். ஆயினும் அவன் சக மனிதர்களை அடித்து, ஏசி அவர்களது உரிமைகளை பறித்திருப்பான். அவனது குற்றங்களுக்கு பரிகாரமாக அவனது நன்மைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும். மேலும் முறையீடுகள் இருக்கும் நிலையில் அவனிடம் நன்மைகள் இல்லாத போது அந்த பாதிக்கப்பட்ட மக்களின் தீமைகள்இவனது கணக்கில் ஏற்றப்பட்டு அவன் நரகம் செல்வான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.எனவே இஸ்லாம் என்பது வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லக்கூடிய மதம் அல்ல. மாறாக மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், உரிமைகள் பற்றியும் எடுத்துச் சொல்லக்கூடிய வாழ்க்கை நெறியாகும். இவ்வாறாக மனித வாழ்வில் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது இஸ்லாம்.'இஸ்லாம்' என்றால் 'அடிபணிதல்'என்று பொருள். படைத்த இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதன் மூலம் அமைதி கிடைக்கும் என்பதால்இஸ்லாம் என்பதற்கு 'அமைதி' என்ற பொருளும் உண்டு.
சுய சிந்தனை வழங்கப்பட்ட மனிதனும் தன்னைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு அடிபணிந்து நடந்தால் மனிதர்களுக்கு இடையேயும் அமைதி நிலவும் என்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. இஸ்லாம் சொல்லக்கூடிய கடவுள் கொள்கை: நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே. படைத்தவனான அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைக்கப்பட்டவையே. படைக்கப்பட்டவற்றை வணங்கக்கூடாது. படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும்.
'அல்லாஹ்' என்ற அரபுச் சொல்லுக்கு 'இறைவன், கடவுள்' என்று பொருள். அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமான கடவுள் என்றோ, அரபு நாட்டுக்கு மட்டுமான கடவுள் என்றோ பொருளல்ல. மாறாகவானம், பூமி யாவையும் படைத்த, மனிதர்கள் அனைவரையும் படைத்த அந்த ஏக இறைவனையே 'அல்லாஹ்' என்ற அரபு சொல் குறிக்கிறது. இந்த உலகம் எவ்வாறு தோன்றியதோ அவ்வாறு ஒருநாள் அழிந்து போகும். அதன் பிறகு மனிதர்கள் அனைவரையும் எழுப்பி இறைவன் கேள்வி கணக்கு கேட்கக்கூடிய நாள் ஒன்று உண்டு. அந்த நாளில் இறைவனிடம் வெகுமதி பெற வேண்டும் என்றால் இஸ்லாம் ஒரு
வாழ்க்கை நெறஇறைவனை அறிந்து அவனது கட்டளைகளை பின்பற்றி வாழ வேண்டும். அவனுக்கு இணை கற்பிப்பதை இறைவன் மன்னிக்கவே மாட்டான். அவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ வேண்டும்.
பி.செய்யது இப்ராகிம், சென்னை.